அதிகாரிகள் இல்லாததால் வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகாமல் திரும்பி சென்றார் திவாகரன்


அதிகாரிகள் இல்லாததால் வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகாமல் திரும்பி சென்றார் திவாகரன்
x
தினத்தந்தி 22 Nov 2017 4:45 AM IST (Updated: 22 Nov 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

விசாரணை நடத்த வேண்டிய அதிகாரிகள் இல்லாததால் திருச்சி வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகாமல் திவாகரன் திரும்பி சென்றார்.

திருச்சி,

சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினார்கள். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள சசிகலாவின் தம்பி திவாகரன் வீடு மற்றும் கல்லூரியிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி 14 கார்களில் வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.

இது தொடர்பாக திருச்சியில் உள்ள வருமான வரித்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆஜர் ஆகும்படி திவாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இதற்காக அவர் கடந்த வியாழக்கிழமை திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்று அவர் ஆஜர் ஆகவில்லை.

இதனை தொடர்ந்து நேற்று திவாகரன் ஆஜர் ஆக வருகிறார் என கிடைத்த தகவலின் அடிப்படையில் திருச்சி வில்லியமஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஏராளமானவர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. ஆனால் மதியம் 2 மணி வரை திவாகரன் அங்கு வரவில்லை.

இதுபற்றி விசாரித்த போது மன்னார்குடியில் இருந்து புறப்பட்ட திவாகரன் திருச்சிக்கு வந்து திருவானைக்காவல் பெரியார் நகரில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டில் தங்கி இருந்தார். திருச்சி வருமான வரி அலுவலகத்தில் திவாகரனிடம் விசாரணை நடத்த வேண்டிய அதிகாரிகள் முக்கிய பணி காரணமாக கோவைக்கு சென்று விட்டதால் திவாகரனை வேறு தேதியில் ஆஜர் ஆகும்படி கூறிவிட்டார்களாம்.

இதனை தொடர்ந்து திவாகரன் வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகாமல் மீண்டும் மன்னார்குடிக்கே திரும்பி சென்று விட்டார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இன்று அல்லது நாளை திவாகரன் திருச்சி வருமான வரி அலுவலகத்தில் ஆஜராக வருவார் என எதிர்பார்க்கப் படுகிறது.


Next Story