காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Nov 2017 4:15 AM IST (Updated: 22 Nov 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு,

காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்காலில் ஈரோடு நகர் பகுதியின் குடியிருப்பு கழிவுகள் கலக்கப்பட்டு வந்தது. மேலும், சாய, சலவை பட்டறைகள், தோல் தொழிற்சாலைகளின் கழிவுகளும் வாய்க்காலில் கலந்து வந்ததால் மகசூல் பாதிக்கப்பட்டது. எனவே வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பின்னர் காலிங்கராயன் வாய்க்காலில் 3 கட்டங்களாக பேபி வாய்க்காலுடன் சேர்த்து கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

காலிங்கராயன் வாய்க்காலில் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக விவசாயிகள் நிலத்தை உழுது வருகிறார்கள்.

இந்தநிலையில் பேபி வாய்க்காலில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் ஈரோடு வைராபாளையம் பகுதியில் செல்லும் பேபி வாய்க்காலில் கழிவுநீர் நிரம்பி காலிங்கராயன் வாய்க்காலில் கலந்து வருகிறது. இதேபோல் ஒருசில தொழிற்சாலைகளின் கழிவுநீரும் வாய்க்காலில் கலக்கிறது. எனவே வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:–

பேபி வாய்க்கால் அமைக்கப்பட்டும் கழிவுநீர் நேரடியாக கலந்து வருகிறது. பொதுமக்கள் குப்பைகளை பேபி வாய்க்காலில் கொட்டுவதால் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. எனவே குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அடிக்கடி பேபி வாய்க்காலை தூர்வார வேண்டும். அப்போதுதான் கழிவுநீர் சீராக செல்வதுடன் காலிங்கராயன் வாய்க்காலில் கலப்பதும் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story