சத்தியமங்கலம் அருகே சத்துணவு மையத்துக்கு வழங்கப்பட்ட முட்டையில் புழுக்கள்
சத்தியமங்கலம் அருகே சத்துணவு மையத்துக்கு வழங்கப்பட்ட முட்டையில் புழுக்கள் நெளிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டி.என்.பாளையம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள வனப்பகுதி கிராமம் விளாங்கோம்பை. இங்கு தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 20 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்குள்ள குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 20 முட்டைகள் வீதம் 5 நாட்களுக்கு 100 முட்டைகளை அந்த பள்ளி பொறுப்பாசிரியர் கொங்கர்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் சத்துணவு மையத்தில் இருந்து பெற்று செல்வது வழக்கம்.
அதன்படி முட்டைகளை எடுத்து செல்வதற்காக கொங்கர்பாளையத்தில் உள்ள சத்துணவு மையத்துக்கு அந்த பொறுப்பாசிரியர் நேற்று வந்தார். பின்னர் அவர் தங்கள் பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட முட்டைகளை எடுக்க முற்பட்டார். அப்போது 10–க்கும் மேற்பட்ட முட்டைகள் உடைந்து கிடந்ததுடன், அதில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசியது. மேலும் அந்த முட்டைகளை உற்று பார்த்த போது முட்டையின் உள்ளே புழுக்கள் நெளிந்து கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் இதுகுறித்து டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து அதிகாரிகள் கொங்கர்பாளையம் சத்துணவு மையத்துக்கு வந்து அங்கிருந்த முட்டைகளை பார்வையிட்டனர். அப்போது சத்துணவு மையத்துக்கு கெட்டுப்போன முட்டைகள் வழங்கப்பட்டது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. பின்னர் சத்துணவு மையத்துக்கு முட்டைகள் வழங்கிய ஏஜெண்டுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உடைந்த அழுகிய முட்டைகள் உடனடியாக மாற்றி கொடுக்கப்பட்டன.
இதுகுறித்து டி.என்.பாளையம் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி (சத்துணவு திட்டம்) உமேஸ்வரி கூறுகையில், ‘டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 48 சத்துணவு மையங்கள் உள்ளன. இந்த மையங்களுக்கு நாள் ஒன்றுக்கு 1,431 முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. உடைந்த முட்டைகள் சம்பந்தமாக மாவட்ட சத்துணவு திட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், முட்டை கொள்முதல் செய்த ஏஜெண்டை தொடர்பு கொண்டு புழுக்கள் இருந்த முட்டைகளுக்கு பதிலாக நல்ல முட்டைகளை மாற்றி கொடுத்து விட்டோம்.
மேலும் அனைத்து சத்துணவு மையங்களையும் தொடர்பு கொண்டு வாகனங்களில் இருந்து முட்டைகளை இறக்கி வைக்கும்போது அவைகளை சோதனை செய்து இறக்கி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி தினமும் முட்டைகளை பரிசோதித்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சிறப்பு பள்ளிக்கும், எங்களுக்கும் தொடர்பு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘சமீபகாலமாக எங்கள் பகுதியில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. முட்டை விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது. இதனால் முட்டை கொள்முதல் மையங்களில் பழைய முட்டைகளை கலந்து விடுகிறார்கள் என எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் முட்டைகளை முறையாக ஆய்வு செய்து அனுப்ப வேண்டும்,’ என்றனர். சத்துணவு மையத்துக்கு வழங்கப்பட்ட முட்டையில் புழுக்கள் நெளிந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.