ஆதார் கார்டில் 60 வயது மூதாட்டி 2000-ம் ஆண்டில் பிறந்ததாக பதிவு


ஆதார் கார்டில் 60 வயது மூதாட்டி 2000-ம் ஆண்டில் பிறந்ததாக பதிவு
x
தினத்தந்தி 22 Nov 2017 4:30 AM IST (Updated: 22 Nov 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

ஆதார் கார்டில் 60 வயது மூதாட்டி 2000-ம் ஆண்டில் பிறந்ததாக தகவல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனை திருத்தம் செய்யக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அவர் மனு கொடுத்தார்.

பெரம்பலூர்,

அரசின் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கும், தனது அடையாளமாக முக்கிய ஆவணங்களில் இணைப்பதற்கும் ஆதார் கார்டு பெறுவது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தியது.

அதன் பேரில் மக்களும் போட்டி போட்டு கொண்டு தங்களது பெயர், விவரம், முகவரி, புகைப்படம், கைரேகை உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்த ஆதார் கார்டில் குளறுபடி இருந்தால் அதனை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரை சேர்ந்த செல்வாம்பாள் என்கிற 60 வயது மூதாட்டிக்கு ஆதார் கார்டில் பிறந்த தேதி 19-10-2000 என பதிவிடப்பட்டிருக்கிறது.

அடையாள அட்டையாக சில அலுவலகங்களில் அந்த கார்டை சமர்ப்பித்த போது தான் பிறந்த தேதி தவறுதலாக இருந்ததாக சிலர் சுட்டி காட்டினர். மேலும் அந்த கார்டில் அவரது கணவர் பெயர் கருப்பையா என்பதற்கு பதில் காருப்பையா என எழுதப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் பிறந்த தேதி, கணவர் பெயரை திருத்தம் செய்ய பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது இ-சேவை மையம் அருகே ஆதார் கார்டு பணிகள் நடைபெறும் அலுவலகத்தில் செல்வாம்பாள் நேற்று மனு கொடுத்தார். இந்த ஆதார் கார்டை பெற்று கொள்ள நீண்ட தூர வரிசையில் கால்கடுக்க நின்றபின்னரே தகவலை பதிவு செய்து கார்டு கொடுத்தனர். ஆனால் அந்த கார்டிலும் தவறு ஏற்பட்டு தற்போது வயதான காலத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு அலைந்து திரிவது சிரமமாக இருப்பதாக செல்வாம்பாள் தெரிவித்தார். 

Next Story