சேலம் சூரமங்கலம் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு


சேலம் சூரமங்கலம் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Nov 2017 4:30 AM IST (Updated: 22 Nov 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

சேலம் சூரமங்கலம் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார்.

சேலம்,

சேலம் சூரமங்கலம் பகுதியில் நேற்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு பணிகள் நடைபெற்றது. அப்போது கலெக்டர் ரோகிணி தலைமையில் வீடுவீடாக சென்று டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கலெக்டர் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மேலும் கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் தேங்கியுள்ளதா? எனவும் ஆய்வு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து கலெக்டர் ரோகிணி கூறியதாவது:–

மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் முழுமையாக குறைந்துள்ளது. மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய டெங்கு கொசுக்கள் முறையாக மூடிவைக்கப்படாத நல்ல தண்ணீரில் உற்பத்தி ஆகிறது என்பதை தொடர்ச்சியாக, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பள்ளிகளில் ஏற்படுத்திய பல்வேறு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையால், பள்ளி மாணவ, மாணவிகள் தற்போது முழுமையான விழிப்புணர்வை பெற்று, தங்களது வீடுகளிலும், சுற்றுப்புறத்திலும் இருப்பவர்களுக்கு டெங்கு தடுப்பு பற்றிய விழிப்புணர்வை தெரிவிக்கின்றனர்.

இதனால் பெற்றோர்களும் அதற்கேற்ப தங்களது வீடுகளில் உள்ள தண்ணீரினை முறையாக மூடிவைப்பதும் டீ கப், டயர்கள், பழைய பாத்திரங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்துவதாகவும், தாங்கள் இருக்கும் இடம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டு இருப்பதாக தெரிவித்தனர். டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளில் மாவட்ட நிர்வாகத்திற்கு சிறப்பாக ஒத்துழைப்பு அளித்து வரும் பொதுமக்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.


Next Story