‘பண மதிப்பு நீக்கத்தால் பொதுமக்கள் பிச்சைக்காரர்களாக மாறிவிட்டார்கள்’ மத்திய அரசு மீது சிவசேனா பாய்ச்சல்
‘‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொதுமக்கள் பிச்சைக்காரர்களாக மாறிவிட்டார்கள்’’ என்று மத்திய அரசுக்கு சிவசேனா மீண்டும் கண்டனம் தெரிவித்தது.
மும்பை,
‘‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொதுமக்கள் பிச்சைக்காரர்களாக மாறிவிட்டார்கள்’’ என்று மத்திய அரசுக்கு சிவசேனா மீண்டும் கண்டனம் தெரிவித்தது.
பிச்சைக்காரர்கள்இது தொடர்பாக பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகையின் தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:–
ஆங்கிலேயர்கள் 150 ஆண்டுகாலம் பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்தி இந்தியாவை ஆண்டார்கள். அவர்கள் பொதுமக்களை சுரண்டி மட்டுமே ஆட்சிபுரிந்ததால் அவர்களது ஆட்சிமுறையை தெய்வீக ஆட்சிமுறை என்று குறிப்பிட இயலாது.
இதேபோல், தற்போதைய ஆட்சிமுறையை தெய்வீக ஆட்சிமுறை என்று கருதுபவர்கள், கடவுளை அவமதிப்பதை முதலில் நிறுத்த வேண்டும். என்றைக்கும் பொதுமக்கள் தான் கடவுள். ஆனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர், பொதுமக்கள் பிச்சைக்காரர்களாக மாறிவிட்டார்கள்.
பல்வேறு விவகாரங்களில் புகழ் பெறுவதற்காக விளம்பரம் செய்து ஏராளமான பணத்தை விரயம் செய்யும் மோடி அரசு, விதர்பா மண்டலத்தில் பருத்தி விளைச்சலை பூச்சிகள் தாக்கும் பிரச்சினையில் மவுனம் சாதிப்பது ஏன்?
வியப்பு அளிக்கிறது‘புல்லட் ரெயில்’ திட்டம் மோடி அரசின் பரிசு என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால், மும்பை மலாடு– கோரேகாவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்த போது, ரெயில் மோதி 3 பெண்கள் பலியான சம்பவத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்காதது ஏன்?
வெளிப்படையான அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றிகள் மூலம் நீங்கள் செல்வாக்கு பெற்றீர்கள். விதர்பாவில் பாரம்பரிய பொருட்களின் உற்பத்தியாளர்கள் வேலைவாய்ப்பை இழப்பதற்கு மோடி அரசும், பட்னாவிஸ் அரசும் பொறுப்பு ஏற்குமா?
உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் மகுடம் சூட்டிக் கொண்ட பின்னர், இந்த சாதனைக்கு சொந்தம் கொண்டாட யாரும் முன்வராதது வியப்பு அளிக்கிறது.
இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.