ரத்த அழுத்தத்தை எகிறச்செய்த அமெரிக்காவின் அறிவிப்பு


ரத்த அழுத்தத்தை எகிறச்செய்த அமெரிக்காவின் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2017 1:21 PM IST (Updated: 22 Nov 2017 1:21 PM IST)
t-max-icont-min-icon

‘அமெரிக்கா இருதயவியல் கல்லூரியும்’, அமெரிக்க இருதய கூட்டமைப்பும் சேர்ந்து, ரத்த அழுத்தம் சம்பந்தமாக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது.

‘அமெரிக்கா இருதயவியல் கல்லூரியும்’, அமெரிக்க இருதய கூட்டமைப்பும் சேர்ந்து, ரத்த அழுத்தம் சம்பந்தமாக ஒரு புதிய அறிவிப்பை திடீரென்று வெளியிட்டு, உலகிலுள்ள மொத்த ஜனத்தொகைக்கும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிட்டது.

“அதாவது, 140/80 என்று உலகம் முழுவதும் இருந்து வந்த ரத்த அழுத்த அளவை மாற்றி, இனிமேல் 130/80 தான் சரியான அளவு, இதற்கு மேலிருந்தால் அவர்கள் ரத்த அழுத்த நோயாளிகளாக கருதப்படுவார்கள்” என்பதுதான் அந்த செய்தி.

இந்த அறிவிப்பு வெளிவந்தபிறகு அமெரிக்காவில் மட்டும் ஒரே நாளில் சுமார் 32 சதவீத மக்கள், ‘அதிக ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளாக’ மாறிவிட்டனராம்.

அப்படி என்றால், உலகம் முழுக்க எவ்வளவு பேர் அதிக ரத்த அழுத்த நோயாளிகளாக மாறியிருப்பார்கள் என்று சற்று நினைத்துப் பாருங்கள்.

சமீபத்திய கணக்கெடுப்பின்படி, உலக மக்கள் தொகை சுமார் 760 கோடியாகும். 1980-ம் ஆண்டு ஆய்வின்படி, உலகம் முழுவதும் அதிக ரத்த அழுத்த நோயாளிகள், அதாவது மருந்து மாத்திரை சாப்பிட்டுத்தான் ரத்தக்கொதிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்று வாழ்ந்தவர்கள் சுமார் 60 கோடி பேர் இருந்தார்களாம்.

2008-ல் இது சுமார் 100 கோடியாக அதிகரித்து விட்டதாம். உலகம் முழுவதும் 40 சதவீத மக்கள் அதாவது சுமார் 300 கோடி மக்கள் அதிக ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று வைத்துக்கொள்ளலாம்.

இனி நம்ம ஊருக்கு வருவோம். இந்தியாவின் இன்றைய ஜனத்தொகை 128 கோடி. இதில் 40 சதவீதம் அதாவது சுமார் 51 கோடி மக்கள், ரத்தக்கொதிப்பு நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தானே அர்த்தம். இது மிகப்பெரிய பாதிப்பல்லவா!

மொத்தத்தில் உலக ஜனத்தொகையில் சுமார் 32 சதவீத மக்கள் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளாவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று அமெரிக்க ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்த புதிய வழிகாட்டுதல் மூலம் ரத்த அழுத்தத்தின் அளவு மாற்றப்பட்டாலும், அது சொல்ல வருவது என்னவென்றால், 1) அதிக ரத்த அழுத்தத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் அதிகமாக ஏற்படுத்த வேண்டும், 2) அன்றாட வாழ்க்கை முறைகள், அன்றாட உணவுப்பழக்க முறைகள் போன்றவைகளை மாற்றவேண்டும், 3) ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்று முடிவாகிவிட்டால், ரத்த அழுத்தத்தைக் குறைக்க கண்டிப்பாக மருந்து மாத்திரைகளை சாப்பிடவேண்டும், 4) அப்படி மருந்துகள் எடுத்துக்கொள்ளாவிட்டால் இருதய நோய் பாதிப்பு அதிகமாக ஏற்படும். இது போன்ற அறிவுரைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்பதே இந்தப் புதிய ரத்த அழுத்த அளவுமாற்றம்” என்று அமெரிக்க இருதய கூட்டமைப்பு கூறுகிறது.

அமெரிக்காவிலுள்ள சிறிய விஞ்ஞானிகள் குழு, ஒரு குறைவான ஜனத்தொகையை வைத்துக்கொண்டு, பரிசோதனை செய்து இந்த மாதிரி அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள், இதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் ரத்த அழுத்த நோயாளிகள் அல்ல” என்று மற்றொருபுறம் சில குரல்கள் உலகின் பல இடங்களிலிருந்தும் ஒலிக்கத் தான் செய்கின்றன.

திடீரென்று பாம்பைப் பார்த்தவுடன், பல்லியைப் பார்த்தவுடன், திட்டினால், கோபப்பட்டால், அதிக உணர்ச்சி வசப்பட்டால், அதிக கவலைப்பட்டால், சரியாக தூங்காவிட்டால் இப்படிப் பல்வேறு காரியங்களில் அந்த நேரத்தில் ரத்த அழுத்தம் கூடத்தான் செய்யும்.

இந்த ஒரு நேரம் தற்காலிகமாக ரத்த அழுத்தம் கூடுதலாக இருப்பதை கணக்கில் கொண்டு, அந்த நபருக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது என்ற முடிவுக்கு வரக்கூடாது.

“இப்போதெல்லாம் அடிக்கடி தலை சுத்துது, கண் இருளுது, அதிகமா வியர்த்துக் கொட்டுது, உடம்பெல்லாம் சூடா இருக்கிறமாதிரி இருக்குது, ஒருவேளை அதிக ரத்த அழுத்தம் இருக்குமோ” என்று பரிசோதனை செய்ய டாக்டரிடம் வருகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

அதிக ரத்த அழுத்தத்துக்கான அறிகுறிகள் உடலில் தென்படுகிறது என்று தெரியவந்தால், உடனே உங்கள் குடும்ப டாக்டரைப் பாருங்கள். டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகளை சாப்பிடுங்கள். மருந்துகள் தேவையில்லை, வெறும் உணவுக்கட்டுப்பாடும், நல்ல தூக்கமும், தினசரி உடற்பயிற்சியும், உணவில் போதுமான அளவு உப்பும் போதுமென்று டாக்டர்கள் சொன்னால், அதைக் கடைப்பிடியுங்கள்.

அதிக ரத்த அழுத்தத்தைப் பற்றிய புதிய வழிகாட்டுதலைப் பற்றி கவலைப்படாதீர்கள். அதுவே உங்களது ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்துவிடும்.

-டாக்டர் எஸ்.அமுதகுமார், குடும்ப நல மருத்துவர், சென்னை.


Next Story