முகவரி கேட்பதுபோல் நடித்து நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
சேலத்தில் முகவரி கேட்பதுபோல் நடித்து, நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சூரமங்கலம்,
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் ஜீவாநகரை சேர்ந்தவர் பொன்னி (வயது 53). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பொன்னி அருகில் வந்து நின்றனர்.
பின்னர் அவர்கள், பொன்னியிடம் ஒரு காகிதத்தில் இந்தியில் எழுதி வைத்திருந்த முகவரியை காண்பித்து அது எங்கே உள்ளது? என கேட்டனர். அதற்கு அவர், இந்த முகவரி பற்றி எனக்கு தெரியாது என்று கூறினார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த மர்ம ஆசாமி திடீரென பொன்னி கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை மின்னல் வேகத்தில் பறித்தான்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ‘திருடன், திருடன்‘ என்று கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் மர்ம ஆசாமிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொன்னியிடம் நகை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.