பெங்களூரு–மைசூரு விரைவு சாலை திட்டம் தொடர்பாக நைஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்


பெங்களூரு–மைசூரு விரைவு சாலை திட்டம் தொடர்பாக நைஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 23 Nov 2017 2:49 AM IST (Updated: 23 Nov 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு–மைசூரு விரைவு சாலை திட்டம் குறித்து நைஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் குமாரசாமி வலியுறுத்தினார்.

பெலகாவி,

பெங்களூரு–மைசூரு விரைவு சாலை திட்டம் குறித்து நைஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் குமாரசாமி வலியுறுத்தினார்.

ரத்து செய்ய வேண்டும்

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 13–ந் தேதி தொடங்கி பெலகாவி சுவர்ண சவுதாவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் 8–வது நாள் கூட்டம் சுவர்ண சவுதாவில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், ஜனதா தளம்(எஸ்) குழு தலைவர் குமாரசாமி எழுந்து பேசினார். அவர் பேசுகையில், “பெங்களூரு–மைசூரு விரைவுச்சாலை திட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இதுதொடர்பாக நைஸ் நிறுவனத்துடன் மாநில அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து விதி எண் 60–ன் கீழ் விவாதிக்க அனுமதி வழங்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டத்துறையே பரிந்துரை செய்துள்ளது. சட்டசபை கூட்டு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கையை இந்த சபையில் தாக்கல் செய்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்’’ என்றார்.

அரசு மவுனம் காப்பது ஏன்?

குமாரசாமியின் இந்த கருத்தை ஆதரித்து ஜனதா தளம்(எஸ்) குழு துணைத்தலைவர் ஒய்.எஸ்.வி.தத்தா, பா.ஜனதா உறுப்பினர்கள் சதீஸ்ரெட்டி, விஸ்வநாத் ஆகியோர் பேசினர். அவர்கள் பேசும்போது, “இதுபற்றி விவாதிக்க அனுமதி வழங்க வேண்டும். சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா தலைமையில் கூட்டு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அறிக்கை தாக்கல் செய்த பிறகும் அரசு மவுனம் காப்பது ஏன்? யாரை பாதுகாக்க இந்த அரசு முயற்சி செய்கிறது?. நைஸ் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. அல்லது அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் சட்டசபை கூட்டு குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

ஆயினும் இந்த அரசு அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேள்வி நேரம் முடிந்த பிறகு இதுபற்றி விவாதிக்க அனுமதி வழங்க வேண்டும். வட கர்நாடகத்தின் வளர்ச்சி பற்றி விவாதம் நடைபெறும்போது, இந்த நைஸ் முறைகேடு குறித்தும் இங்கே விவாதம் நடக்க வேண்டும்’’ என்றார். இந்த விவாதத்திற்கு அனுமதி வழங்குவதாக சபாநாயகர் உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.


Next Story