ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்தக்கோரி மனித சங்கிலி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நடத்தினர்


ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்தக்கோரி மனித சங்கிலி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நடத்தினர்
x
தினத்தந்தி 23 Nov 2017 10:45 PM GMT (Updated: 23 Nov 2017 8:16 PM GMT)

ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்தக்கோரி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

திருச்சி பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று பி.எஸ்.என்.எல். அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இரண்டாவது ஊதிய குழுவில் விடுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், 1.1.2017 முதல் நடைபெற வேண்டிய மூன்றாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், பி.எஸ்.என்.எல்.ஐ நலிவடைய செய்யும் துணை டவர் நிறுவனம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

தலைமை தபால் நிலைய ரவுண்டானாவில் இருந்து பெரும்பிடுகு முத்தரையர் சிலை வரை நடைபெற்ற இந்த மனித சங்கிலியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெருமளவில் கலந்து கொண்டு வரிசையாக கைகோர்த்த படி அணிவகுத்து நின்றனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினார்கள். இதில் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அஸ்லம் பாஷா, பழனியப்பன், ரவீந்திரன், சரவணகுமார், தாமரை கண்ணன், காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக டிசம்பர் 12 மற்றும் 13-ந்தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Next Story