திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் உள்ள நல்லாற்றில் மீண்டும் சாயக்கழிவு நீர் கலப்பு


திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் உள்ள நல்லாற்றில் மீண்டும் சாயக்கழிவு நீர் கலப்பு
x
தினத்தந்தி 24 Nov 2017 4:30 AM IST (Updated: 24 Nov 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் உள்ள நல்லாற்றில் மீண்டும் சாயக்கழிவு நீர் திறந்துவிடப்பட்டதால் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.

திருப்பூர்,

திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நொய்யல் ஆறு, நல்லாறு, ஜம்மனை ஓடை, சங்கிலிபள்ளம் ஓடை உள்ளிட்ட நீர் நிலைகளில் அவ்வப்போது சாயக்கழிவு நீர் கலக்கப்பட்டு வருகிறது.

இதன்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றுகாலை பிச்சம்பாளையம் பகுதியில் உள்ள நல்லாறு பகுதியில் திடீரென சிவப்பு நிறத்தில் சாயக்கழிவு நீர் பாய்ந்து சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அங்கு கூடினார்கள்.

ஆனால் சிறிது நேரம் பாய்ந்த அந்த சாயக்கழிவுநீர் பின்னர் நின்றுவிட்டது. இந்த சாயக்கழிவு நீர் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.

குழாய் உடைப்பால் இந்த சாயக்கழிவுநீர் வெளியேறியதா? அல்லது சட்டவிரோதமாக செயல்படும் சாய ஆலையினர் இந்த கழிவுநீரை திறந்து விட்டனரா? என்பதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் சாய ஆலைகள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story