பனப்பாக்கம் அரசு பள்ளியில் பிளஸ்–1 வகுப்பு மாணவிகள் வேறு அறைக்கு மாற்றம்


பனப்பாக்கம் அரசு பள்ளியில் பிளஸ்–1 வகுப்பு மாணவிகள் வேறு அறைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 1 Dec 2017 3:45 AM IST (Updated: 30 Nov 2017 11:10 PM IST)
t-max-icont-min-icon

பனப்பாக்கம் பள்ளியில் பிளஸ்–1 வகுப்பு மாணவிகள் வேறு அறைக்கு மாற்றப்பட்டனர். ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு வந்தனர்.

பனப்பாக்கம்,

பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த பிளஸ்–1 மாணவிகள் மனிஷா, தீபா, ரேவதி, சங்கரி ஆகியோர் கடந்த 24–ந் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக தலைமை ஆசிரியை ரமாமணி, வகுப்பு ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியைகள் லில்லி, சிவக்குமாரி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை மழை பெய்ததால் மைதானத்தில் இறைவணக்கம் நடைபெறவில்லை. நேற்று முன்தினம் போல் மாணவிகள் வகுப்புகளிலேயே எழுந்து நின்று இறைவணக்கம் பாடி பிரார்த்தனை செய்தனர்.

4 மாணவிகள் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில் சக மாணவிகளும், ஆசிரியைகளும் உள்ளனர். இதையடுத்து பிளஸ்–1 படிக்கும் மாணவிகளுக்கு இறந்த சக மாணவிகளின் நினைவுகள் வரக்கூடும் என்பதால் 81 மாணவிகளும் தலைமை ஆசிரியை அறைக்கு அருகில் உள்ள 2 வகுப்பறைக்கு நேற்று மாற்றப்பட்டனர்.

மேலும் அங்கு மற்ற வகுப்புகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மேஜை, நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன.

இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனே பணி வழங்கக்கோரியும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரியும், மாணவிகளுக்கு இரங்கல் தெரிவித்தும் நேற்று பள்ளிக்கு வந்த 36 ஆசிரியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

தொடர்ந்து பள்ளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story