ஒட்டன்சத்திரம் அருகே லாரி–கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி


ஒட்டன்சத்திரம் அருகே லாரி–கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
x
தினத்தந்தி 1 Dec 2017 4:15 AM IST (Updated: 30 Nov 2017 11:21 PM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே லாரியும், காரும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.

ஒட்டன்சத்திரம்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 42). நிதி நிறுவன அதிபர். இவருடைய மனைவி சந்திரா (35).

தங்கவேலின் தங்கை ஜோதிமணி (39), சந்திராவின் தங்கை கோகிலா (25), அவருடைய தாயார் பொம்முத்தாய் (55) ஆகியோருடன் ஒரு காரில் தங்கவேல் தம்பதியினர் நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, நேற்று காலையில் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்துகொண்டு இருந்தனர். காரை தங்கவேல் ஓட்டினார்.

ஒட்டன்சத்திரம் அருகே கார் வந்து கொண்டு இருந்தது. அப்போது தங்கவேல் ஓட்டி வந்த காரும், எதிரே வந்த லாரியும் மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. விபத்தை ஏற்படுத்திய லாரி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. லாரி டிரைவர் உயிர் தப்பினார்.

இடிபாடுகளில் சிக்கி தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த ஒட்டன்சத்திரம் போலீசார் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் வழியிலேயே பொம்முத்தாய், கோகிலா, ஜோதிமணி ஆகியோர் இறந்தனர். சந்திரா மேல்சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த துயர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story