என்ஜினீயர் ரகுபதியின் மரணத்துக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்; மு.க.ஸ்டாலின்


என்ஜினீயர் ரகுபதியின் மரணத்துக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்; மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 1 Dec 2017 5:30 AM IST (Updated: 1 Dec 2017 12:10 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஆளும் கட்சினர் சாலைப்பகுதியில் அமைத்துள்ள பேனர்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்தில் சிக்கி மரணம் அடைந்த என்ஜினீயர் ரகுபதியின் மரணத்துக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோவை,

கோவை அரசு மருத்துவ கல்லூரி அருகில் கடந்த 25–ந்தேதி நடைபெற்ற விபத்தில் ஆர்.ஜி.புதூர் பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ரகுபதி பலியானார். இந்த நிலையில் நேற்று கோவை வந்த மு.க.ஸ்டாலின் ரகுபதியின் வீட்டுக்கு சென்று அவருடைய தந்தை கந்தசாமி, தாய் சிவகாமி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:–

ரகுபதி என்ற இளைஞர் நியாயமாக மணக்கோலத்தில் இருக்க வேண்டிய நேரத்தில் பிணக்கோலமாக மாறிய கொடுமை மிகுந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ஜினீயர் ரகுபதியை இழந்து வாடும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக நாங்கள் இங்கு வந்து இருக்கிறோம். இந்த சம்பவத்தை பொறுத்த அளவில் நியாயமாக, சாலைகளில் பேனர்களோ, கட்–அவுட்டுகளோ அலங்கார வளைவுகளோ வைக்க கூடாது என்று அண்மையில் நீதிமன்றங்கள் தீர்ப்பை தந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக உயிருடன் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்களின் படங்களுடன் பேனர்கள் வைக்க கூடாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவையில் ஆளுங்கட்சி சார்பில் முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் உருவம் பதித்த ராட்சத பலூன்களையெல்லாம் பறக்கவிட்ட செய்திகளை நாம் நன்றாக அறிவோம்.

என்ஜினீயர் ரகுபதி, லாரி வரும்போது அதில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக வேறு ஒரு பக்கம் திரும்பும் நேரத்தில் அலங்கார வளைவில் முட்டி, மோதி அந்த காரணத்தினால் இறந்து இருப்பது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் மனதில் வைத்துதான், தி.மு.க. செயல்தலைவராக நான் என்று பொறுப்பு ஏற்றேனோ, அன்றே தெளிவான செய்தியை தி.மு.க.வினருக்கு தெரிவித்து இருந்தேன்.

‘நானாக இருந்தாலும், கழக முன்னோடிகள் யாராக இருந்தாலும் எந்த நிகழ்ச்சிக்கும் கட்–அவுட், பேனர்கள் வைக்க கூடாது. அது பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கிறது. பொதுமக்கள் அதனை விரும்பவில்லை. எனவே யாரும் வைக்க கூடாது. மீறி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று நான் அறிவித்தேன். அந்த நடைமுறை தி.மு.க.வை பொறுத்தவரை கடைபிடிக்கப்படுகிறது.

ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வை பொறுத்தவரை, கோர்ட்டு உத்தரவு போட்ட பிறகும். இந்த ஆடம்பர அலங்கார வளைவுகளையெல்லாம் வைக்க கூடிய காட்சி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இந்த கொடுமையான சம்பவம் நடந்த உடனேயே தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்கை நான் அழைத்து உடனடியாக நீங்கள் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்றும், இதுகுறித்து வழக்குப்போட வேண்டும் என்றும் பணித்தேன்.

அவரும் உடனடியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு போட்டார். இந்த வழக்கில் தி.மு.க. மூத்த வக்கீல் வில்சன் ஆஜராகி வாதாடினார். சென்னை ஐகோர்ட்டு ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. இனி யாரும் பொதுமக்களுக்கு இடையூறு தரக்கூடியவகையில் கட்அவுட், பேனர் வைக்க கூடாது என்ற தீர்ப்பு வந்துள்ளது வரவேற்க கூடிய வி‌ஷயம். அனுமதி வாங்கி வைக்கலாம் என்ற சூழ்நிலை இருந்தாலும், இதற்கு அனுமதிக்க கூடாது என்பது என்னுடைய அழுத்தமான வற்புறுத்தலாகும்.

ரகுபதியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்துக்கு தி.மு.க. சார்பில், தலைவர் கலைஞர் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கோவையில் பல்வேறு தெருக்களில் சுற்றிப்பார்த்துவிட்டுத்தான் வந்துள்ளேன். சென்ற இடங்களில் எல்லாம் பேனர்கள் உள்ளது. ஆயிரக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு நடபாதையிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. என்ஜினீயர் ரகுபதியின் மரணத்துக்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்றுக்கொண்டு உடனடியாக பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் தம்பி மகள் வித்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். கோவை ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று வித்யாவின் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன்பின்னர் கட்சியின் முன்னாள் எம்.பி.க்கள். ரா.மோகன், மு.ராமநாதன், க.ரா.சுப்பையன் ஆகியோரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணபதி செல்வராஜின் மகன் கார்த்திக்கையும் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

மு.க.ஸ்டாலினுடன் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வெள்ளக்கோவில் சாமிநாதன், இளித்துரை கா.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் முத்துசாமி, தமிழ்மணி, சி.ஆர்.ராமச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.கண்ணப்பன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்று இருந்தனர்.


Next Story