தடய அறிவியலால் சிக்கிய மகன்
பட்டப்படிப்பு முடித்த ஒரு மகன், தன் தந்தைக்குச் செய்த உதவி என்ன? என்பது பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
ஐந்து அறிவு கொண்ட விலங்குகளில் இருந்து மனிதர்களை வித்தியாசப்படுத்தி, மனிதநேயத்தோடு நாகரிகமாக வாழப் பெரிதும் துணை புரிவது ‘கல்வி.’ அறிவியல் வளர்ச்சியடைந்த இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில், கல்வி கற்றவர்களில் சிலர், சில சமயங்களில் விலங்குகளைக் காட்டிலும் தரம் தாழ்ந்து, மனிதநேயத்தை நேசிப்பவர்களை முகம் சுளிக்கச் செய்யும் வகையில் நடந்து கொள்வதைக் காண முடிகிறது. கல்வி கற்றலின் உண்மையான நோக்கத்தை உணர்ந்து கொள்ளாமல், தேர்வுகளில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு பதில் எழுதி, தேர்வில் வெற்றி பெறுவதே ‘கல்வி கற்றல்’ என்ற கருத்து சமுதாயத்தில் பரவலாக நிலவி வருகிறது.
கல்வி கற்க வைத்த தந்தைக்கு ஒரு மகன் செய்ய வேண்டிய கடமை என்ன? என்பது பற்றி தெய்வப் புலவர் திருவள்ளுவர் அழகாக சொல்லியிருக்கிறார்.
பட்டப்படிப்பு முடித்த ஒரு மகன், தன் தந்தைக்குச் செய்த உதவி என்ன? என்பது பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
2008-ம் ஆண்டில் ஒரு நாள்..
அப்பொழுது நான் திருநெல்வேலி சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாகப் பணிபுரிந்து வந்தேன். அந்த சரகத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தனிப்பிரிவு ஆய்வாளர்கள் (Special Branch Inspectors) அந்தந்த மாவட்டங்களில் முந்தைய நாளில் நிகழ்ந்த முக்கிய வழக்குகள் குறித்த விவரங்களைத் தினந்தோறும் காலையில் தொலைபேசி மூலம் எனக்குத் தெரியப்படுத்துவார்கள்.
‘ஏர்வாடி காவல்நிலையப் பகுதியில் ரெயில் விபத்தில் வயதான ஆண் ஒருவர் நேற்று இரவில் இறந்துள்ளார். அவரது பிரேதம் ரெயில்வே தண்டவாளத்தை அடுத்துள்ள நீர் நிறைந்த குட்டையில் பலத்த காயங்களுடன் கிடக்கிறது. ரெயில் விபத்தில் இறந்து கிடப்பவர் நேற்றிலிருந்து காணவில்லை என்று அவரது மகன் ஏற்கனவே ஏர்வாடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்’ என்று திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் அன்றைய தினம் காலையில் எனக்கு தகவல் தெரியப்படுத்தினார்.
இந்த வழக்கின் முழு விவரம் குறித்து தெரிந்து கொள்ள, சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி.யைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரும், ஏர்வாடி காவல்நிலைய ஆய்வாளரும் விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டும், பிரேதத்தின் மீதுள்ள காயங்களின் தன்மை குறித்து ஆய்வு செய்தும் புலன் விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
‘சார்.. விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வடபுறமாக சுமார் 200 அடி தூரத்தில் உள்ள நீர் தேங்கியுள்ள குட்டை அருகில் பலத்த காயங்களுடன் பிரேதம் கிடக்கிறது. ரெயில் தண்டவாளத்தில் இருந்து பிரேதம் கிடக்கின்ற இடம் வரை ஆங்காங்கே எலும்புத் துண்டுகளும், சதையுடன் கூடிய எலும்புத் துண்டுகளும் சிதறிக் கிடக்கின்றன. சம்பவ இடத்தில் சிதறிக் கிடக்கும் எலும்புத் துண்டுகளைப் பார்க்கும் பொழுது, இறந்து கிடக்கும் நபர் வேகமாகச் சென்று கொண்டிருந்த ரெயிலில் அடிபட்டு தூக்கி எறியப்பட்டிருக்கலாம்’ என்று அவரது முதல் புலன்விசாரணையில் கிடைத்த தகவல்களை என்னிடம் தெரியப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து, இறந்து கிடக்கும் நபர் ‘காணவில்லை’ என்று நேற்று பதிவான வழக்கு குறித்தும், இதுவரை அந்த வழக்கில் மேற்கொண்ட புலன் விசாரணை குறித்தும் ஆய்வாளரிடம் கேட்டேன்.
‘ரெயில் விபத்தில் இறந்தவர் காவல் நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில் விவசாயம். அவருக்கு 40 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் உள்ளது. அவருக்கு 5 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அவர்களில் சிலருக்குத் திருமணமாகி விட்டது. அவரது இரண்டாவது மகன் கல்லூரியில் எம்.காம். படிப்பு படித்து விட்டு, கிராமத்துக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று மாலையில் அவர் காவல்நிலையம் வந்து, அவரது அப்பாவைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார்’- என்று வழக்குப் பதிவான விவரத்தை ஆய்வாளர் கூறினார்.
இறந்தவரின் இரண்டாவது மகன் கொடுத்த புகாரை நான் பார்த்தேன். அதன் சுருக்கம் இதுதான்.
‘எங்களுக்கும், எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஒரு கோவிலின் அறங்காவலர்களுக்கும் நிலம் சம்பந்த மான பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக, வக்கீலைப் பார்த்து ஆலோசனை செய்து வர, நிலம் தொடர்பான ஆவணங்களை எடுத்துக் கொண்டு, என் அப்பா வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் நேற்று காலை புறப்பட்டுச் சென்றார். சில மணி நேரத்திற்குப் பிறகு, நான் எங்களது தோட்டத்திற்குச் சென்றபொழுது, என் அப்பாவின் மோட்டார் சைக்கிள் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ரெயில்வே கேட் பக்கம் நின்று கொண்டிருந்தது. அப்பாவைக் காணவில்லை. வக்கீலிடம் சென்று விசாரித்த போது, என் அப்பா அவரைச் சந்திக்க வரவில்லை என்று கூறிவிட்டார். என் அப்பா காணாமல் போனது தொடர்பாக கோவிலின் அறங்காவலர்கள் நான்கு பேர் மீது சந்தேகம் உள்ளது.’
சம்பவ இடத்தில் இருந்து போலீஸ் அதிகாரிகள் தொலை பேசி மூலம் தெரியப் படுத்திய வழக்கு விவரங்களை உன்னிப்பாகக் கேட்டறிந்த எனக்கு சில சந்தேகங்கள் தோன்றின. அவை:
* இறந்த நபர் வக்கீலைச் சந்திக்கப் போகும் பயண விவரம் சந்தேக எதிரிகள் யாருக்காவது தெரிய வாய்ப்பு இருந்திருக்குமா?. அப்படித் தெரிந்திருந்தால், ஒரு சமயம் அவர்கள் அவரைக் கடத்திச் சென்றிருக்கலாமா?
* வக்கீலைப் பார்க்க மோட்டார்சைக்கிளில் சென்ற வரை வழிமறித்து, பலவந்தப்படுத்தி கடத்திச் சென்றிருந்தால், அதற்கான தடயம் ஏதாவது மோட்டார் சைக்கிளில் இருக்க வேண்டும். ஆனால் அதற்கான தடயம் எதுவும் ஏன் காணப்படவில்லை?
* நேற்று காலையில் காணாமல் போனதாகச் சொல்லப்படும் நபர், ரெயில்வே கேட் அருகில் மீண்டும் நேற்று இரவில் ஏன் வர வேண்டும்?.
* காணாமல் போனவரை பல இடங்களில் தேடிப் பார்த்த அவரது குடும்பத்தாருக்குத் தெரியாதபடி, பகல் முழுவதும் அவர் எங்கு மறைவாகத் தங்கியிருந்திருப்பார்?
இந்த சந்தேகங்களுக்கான தெளிவான விளக்கத்தை கண்டறிந்தால் தான், இறப்பானது விபத்தா? தற்கொலையா? அல்லது வேறு காரணங்களால் நிகழ்ந்துள்ளதா? என உறுதி படுத்த முடியும்.
எனவே, திருநெல்வேலியில் உள்ள தடய அறிவியல் நிபுணரைத் தொடர்பு கொண்டு, உடனடியாக சம்பவ இடம் சென்று பார்வையிட்டு, இவ்வழக்கு தொடர்பான தடய அறிவியல் கருத்துக்களைத் தெரியப்படுத்தும்படி அறிவுரை கூறி அனுப்பிவைத்தேன்.
சம்பவ இடத்தையும், பிரேதத்தையும் ஆய்வு செய்த தடய அறிவியல் நிபுணர் உடனடியாக என்னைத் தொடர்பு கொண்டார்.
* பிரேதத்தின் கழுத்துப் பகுதியில் கூர்மையான வெட்டுக் காயம் ஒன்று உள்ளது. அதே போன்று கால்களிலும் கூர்மையான வெட்டுக் காயங்கள் சில காணப்படுகின்றன. இது போன்ற காயங்கள் ரெயில் விபத்தினால் ஏற்பட வாய்ப்பில்லை. அவை கூர்மையான ஆயுதம் கொண்டு வெட்டியது போன்று இருக்கிறது.
* நேற்று நள்ளிரவில் ரெயில் விபத்தில் இறந்திருந்தால், இறப்பு நிகழ்ந்து 12 மணி நேரம்தான் கடந்திருக்கும். அந்தச் சூழலில் பிரேதம் ‘விரைப்பு தன்மை’யுடன் காணப்பட வேண்டும். ஆனால் பிரேதத்தில் விரைப்புத் தன்மை காணப்படவில்லை. அதனால் இறப்பானது 24 மணி நேரத்திற்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும்.
* பிரேதம் அழுகிய நிலையில், கொப்பளங்களுடன் காணப்பட்டது. கண்கள் வெளியே தள்ளியிருந்தன. இந்த அறிகுறிகள் இறப்பானது 36 மணி நேரத்திற்கு முன்பே நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கின்றன.
அதன்படி இறந்து கிடப்பவர் நேற்று காலையில் காணாமல் போனார் என்பது தவறு. அதற்கு முன்னதாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அப்படியானால் கொலையை மறைப்பதற்காக ‘காணவில்லை’ என்ற புகாரை இறந்தவரின் மகன் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
தன்னுடைய அப்பா காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் கொடுத்தவரின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
2004-ம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் அவர் சம்பந்தப்பட்டவர் என்றும், அந்தக் கொலை வழக்கை விசாரித்த திருநெல்வேலி விரைவு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருப்பதும், அந்த ஆயுள் தண்டனையை தள்ளுபடி செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்திருப்பதும் தெரியவந்தது. இந்தத் தகவல்கள் புகார் கொடுத்தவரின் மீதான எங்களின் சந்தேகத்தை வலுப்படுத்தியது.
அந்த சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கின் வாதியை போலீசார் தேடிப்பிடித்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த வழக்கின் முடிச்சு அவிழ்க்கப்பட்டு, இறப்பு நிகழ்ந்த விதமும், அதற்கான காரணமும் தெரியவந்தன.
இந்த வழக்கின் வாதி சொந்தமாக தொழில் செய்ய மூலதனமாக ஒரு கணிசமான தொகையை அவரது அப்பாவிடம் கேட்டுள்ளார். குடும்ப விவசாயத்தில் கிடைத்த வருமானத்தை வங்கிக் கணக்கில் வைத்திருந்த அவரது தந்தை, பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
மேலும் வாதியின் மீது ஏற்கனவே இருந்த கொலை வழக்கின் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரிய மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு பணம் தேவைப்பட்டது. அதற்கான பணத்தையும் அவரது தந்தை கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர், தனது உறவினர் ஒருவரின் உதவியுடன் தோட்டத்தில் வைத்து தந்தையை வெட்டிக் கொலை செய்துள்ளான். பின்னர் பிணத்தை அங்கேயே மறைத்து வைத்துள்ளான். மறுநாள் காலையில் ‘அப்பா காணவில்லை’ என்று பொய்யான செய்தியை கூறி, அப்பாவைத் தேடுவது போல் நடித்துள்ளான். பிறகு மாலையில் காவல் நிலையத்தில், கோவில் அறங்காவலர்கள் மீது புகார் கூறி, வழக்கை திசை திருப்பவும் முயற்சித்துள்ளான். தொடர்ந்து அன்று இரவில் தோட்டத்திற்கு அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தின் மீது பிணத்தைப் போட்டுள்ளான். நள்ளிரவில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி சென்ற ரெயிலில் பிரேதம் அடிபட்டு தண்டவாளத்திற்கு அருகில் கிடந்துள்ளது.
அப்பாவை கொலை செய்த மகன் நடத்திய கபட நாடகம் அம்பலமானதைத் தொடர்ந்து, இந்த வழக்கை போலீசார், கொலை வழக்காக மாற்றம் செய்தனர். கொலைகாரர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் ஆரம்பகட்ட புலன்விசாரணையில் ஏற்பட்ட தடுமாற்றத்தை, தடய அறிவியல் மருத்துவ ஆதாரங்கள் தான் சரியான பாதைக்கு அழைத்துச் சென்றன. அதற்கு உதவியாக இருந்த தடய அறிவியல் நிபுணர் விஸ்வ முன்னா முகமதுவை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.
Related Tags :
Next Story