டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு குழந்தை உள்பட 4 பேர் பலி


டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு குழந்தை உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 2 Dec 2017 4:00 AM IST (Updated: 1 Dec 2017 11:44 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு குழந்தை உள்பட 4 பேர் பலியாகினர்.

கொடைரோடு,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி சவுண்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடர்மணி. இவருடைய மகள் திரிஷா (வயது 11). இவள் நெய்க்காரப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திரிஷாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அவள் சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் அவளை பரிசோதனை செய்த போது, டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவள் மாற்றப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் திரிஷா பரிதாபமாக இறந்தாள்.

இதேபோல் சாணார்பட்டி ஒன்றியம் சிலுவத்தூரை அடுத்த அதிகாரிபட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (45). ஆட்டோ டிரைவர். அவருடைய மகன் நித்தீஸ் (13). இவன் வங்கமனூத்து கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தான். நித்தீசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அவனை சிலுவத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் நித்தீஸ் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நித்தீஸ் நேற்று பரிதாபமாக இறந்தான். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கொடைரோடு அருகேயுள்ள முருகத்தூரான்பட்டியை சேர்ந்தவர் மதலைமுத்து. அவருடைய மகன் ஜோர்சா (1). கடந்த சில நாட்களாக ஜோர்சாவுக்கு காய்ச்சல் இருந்து வந்தது. நேற்று குழந்தையை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

இதேபோல், அம்மையநாயக்கனூரை அடுத்த நக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி. அவருடைய மகன் முத்துப்பாண்டி (19). இவன் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துப்பாண்டிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அம்மையநாயக்கனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துப்பாண்டி பரிதாபமாக இறந்தார். ஜோர்சாவும், முத்துப்பாண்டியும் மர்ம காய்ச்சலால் இறந்ததாக கூறப்படுகிறது.


Related Tags :
Next Story