புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் விஜயதரணி எம்.எல்.ஏ.கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகர்கோவில்,
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் வங்கிகளில் கடன் பெற்றும், நகை அடகுவைத்தும் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் சாகுபடி செய்திருந்தனர். புயல், மழையால் விளை நிலங்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. பல ஆயிரம் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பலர் வீடுகளை இழந்துள்ளனர்.
பலர் உயிர் இழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் வீதமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். குமரி மாவட்டத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற போது, மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
புயல், மழை வெள்ள இழப்புகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய மாநில அரசுகள் குமரிக்கு மாவட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயதரணி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.