துறையூர் அருகே பள்ளி பஸ்சில் இருந்து விழுந்த மாணவி சக்கரத்தில் சிக்கி பலி


துறையூர் அருகே பள்ளி பஸ்சில் இருந்து விழுந்த மாணவி சக்கரத்தில் சிக்கி பலி
x
தினத்தந்தி 2 Dec 2017 4:00 AM IST (Updated: 2 Dec 2017 1:00 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் அருகே பள்ளி பஸ்சில் இருந்து விழுந்த மாணவி, சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி பரிதாபமாக இறந்தார்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த ஒட்டம்பட்டி புதூரை சேர்ந்தவர் கேசவன். லாரி டிரைவர். இவருடைய மனைவி கமலம், மகள் கனிஷ்கா (வயது 8). கனிஷ்கா துறையூரில் உள்ள வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தாள். வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு கனிஷ்காவை பள்ளி பஸ்சில் கமலம் அனுப்பி வைத்தார்.

மாலையில் பள்ளி முடிந்த பின்பு கனிஷ்கா உள்ளிட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி பஸ் ஒட்டம்பட்டி புதூர் நோக்கி வந்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் ஒட்டம்பட்டியில் உள்ள பாலம் உடைந்தது. இதனால் பள்ளி பஸ் மற்றும் மற்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டு சென்றன.

இதையடுத்து நரசிங்கபுரத்தில் பஸ் வந்தபோது, பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துச்செல்லும் உதவியாளர் மலர்வழி இறங்கி, அவருடைய வீட்டு சென்று விட்டார். இதனால் மாணவ, மாணவிகள் மட்டும் பஸ்சில் இருந்துள்ளனர். பெருமாள்பாளையம் சாலை வழியாக மின்சார தோப்பு அருகில் சென்றபோது, பஸ்சின் பின்பகுதியில் இருந்து கனிஷ்கா திடீரென்று தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்தார்.

இதில் பள்ளி பஸ்சின் பின்பக்க சக்கரம் கனிஷ்கா தலையில் ஏறி, இறங்கியதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்தவுடன் பஸ்சை நிறுத்திவிட்டு, டிரைவர் கோவிந்தாபுரத்தை சேர்ந்த முத்துகணேஷ்(36) அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து, பொதுமக்கள் துறையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள்.

அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், கனிஷ்காவின் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பஸ்சை திடீரென்று பிரேக் பிடித்ததால் மாணவி தவறி விழுந்தாரா? பஸ்சின் பின்பக்க கதவு எப்படி திறந்தது? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய டிரைவர் முத்துகணேசை வலைவீசி தேடிவருகிறார்கள்.

பள்ளி பஸ்சில் இருந்து மாணவி தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story