பெண்ணாடம் அருகே சாலை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்
பெண்ணாடம் அருகே சாலை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
பெண்ணாடம் அருகே கூடலூர் கிராமத்தில் புதுக்காலனி அமைந்துள்ளது. இங்கு வசித்து வரும் மக்களுக்கு சாலை, தெருமின்விளக்கு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி விருத்தாசலம் கோட்டாட்சியர், திட்டக்குடி தாசில்தார் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டு வந்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் தற்போது பெய்த மழையால் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறிகிடக்கிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்று வருவதால், சிரமத்துடனே சாலையை கடக்க வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை கிராமத்தில் திட்டக்குடி–விருத்தாசலம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்பேது தங்கள் பகுதியில் சாலை, தெருமின்விளக்கு வசதிகள் செய்து தரக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி தாசில்தார் சிவக்குமார், ஆவினங்குடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் ராசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் வருகிற 5–ந்தேதி இது தொடர்பாக திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காணலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதையேற்று பொதுமக்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.