அரசு சலுகை வழங்குவதில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
அரசு சலுகை வழங்கப்படுவதில் ‘எய்ட்ஸ்‘ நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்,
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார். பின்னர் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி எடுத்து கொண்டனர். துண்டு பிரசுரங்களையும் அவர் வினியோகித்தார். எச்.ஐ.வி. குறித்து சிறப்பான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய பள்ளி, கல்லூரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி. வைரசை இந்தியாவின் செல்லப்பன் நிர்மலா என்பவர் கண்டறிந்தார். அவர் இந்தியாவை சேர்ந்தவர் என்பதில் பெருமிதம் கொள்வோம். எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த அனைத்து தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றி ஏற்படும்.
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களை சமூகம், மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவற்றில் அவர்கள் மீது அன்பு செலுத்தி சம அந்தஸ்தை சமுதாயத்தில் அளிக்க அனைவரும் முன் வர வேண்டும். இந்த ஆண்டு எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘‘என் நல்வாழ்வு என் உரிமை‘‘ என்ற குறிக்கோளோடு செயல்படுவோம். எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டால் உரிய சிகிச்சை எடுத்து கொள்வதன் மூலம் தங்களது வாழ்நாளை அதிகரித்து கொள்ளலாம். அரசின் சலுகைகள், அனைத்து துறைகளிலும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் 4 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் சந்திப்பதால் அந்த பகுதிகளில் தனி கவனம் செலுத்தி எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளை கொண்டு மென்மேலும் சிறப்பான முறையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கனகராஜ், இணை இயக்குனர் (மருத்துவம், ஊரக நலப்பணிகள்) டாக்டர் கோபாலகிருஷ்ணன், இணை இயக்குனர் (குடும்ப நலம்) டாக்டர் வளர்மதி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் பூங்கொடி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட மேலாளர் டாக்டர் அருணாசலம் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.