ஸ்கூட்டர் மீது பஸ் மோதல்: கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் ஆணையர் மனைவி பலி
உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய போது ஸ்கூட்டர் மீது பஸ் மோதியதில் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் ஆணையரின் மனைவி பலியானார்.
புதுச்சேரி,
புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் விஜயபாலன். அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சந்திரவதனி (வயது58). புதுவையில் உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு இருவரும் மீண்டும் அரியாங்குப்பத்திற்கு ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.
புதுவை–கடலூர் சாலையில் உள்ள ரெயில்வே கிராசிங் அருகே வேகத்டையை கடந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் ஒன்று விஜயபாலன் ஓட்டிவந்த ஸ்கூட்டர் மீது திடீரென்று மோதியது. இதில் நிலை தடுமாறி கணவன்–மனைவி இருவரும் கீழே விழுந்தனர்.
அப்போது சந்திரவதனி மீது அந்த பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தன் கண் முன்னே மனைவி பலியானதை பார்த்து விஜயபாலன் கண்ணீர்விட்டு கதறி அழுதார்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் கிழக்குப்பகுதி போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து சந்திரவதனியின் உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.