ஏ.டி.எம். மையம் தீப்பிடித்து எரிந்தது ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசம்


ஏ.டி.எம். மையம் தீப்பிடித்து எரிந்தது ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 2 Dec 2017 3:17 AM IST (Updated: 2 Dec 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் ஏ.டி.எம். மையம் தீப்பிடித்து எரிந்தது. இதில், ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசமானது.

புனே,

புனே வார்ஜே காம்பஸ் பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதனால் ஏ.டி.எம். மையம் கொழுந்துவிட்டு எரிந்தது.

இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் தீ அருகில் உள்ள கடைக்கும் பரவியது. இதில் அந்த கடையும் பற்றி எரிந்தது.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் எரிந்து நாசமாகின. அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு தான் பணம் நிரப்பப்பட்டு உள்ளது. அதன்பின்னர் 4 மணி நேரத்திலேயே தீ விபத்து ஏற்பட்டு உள்ளது தெரியவந்தது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story