திருப்போரூரில் சென்னை ரவுடி வெட்டிக்கொலை 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்


திருப்போரூரில் சென்னை ரவுடி வெட்டிக்கொலை 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 2 Dec 2017 4:25 AM IST (Updated: 2 Dec 2017 4:25 AM IST)
t-max-icont-min-icon

திருப்போரூரில் சென்னையை சேர்ந்த ரவுடி சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்போரூர்,

சென்னை காசிமேடு ஒய்.எம்.சி.ஏ. குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 28). இவருக்கு மலர் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி கோஷ்டியில் ரவீந்திரன் இருந்தார். இவர் மீது வண்ணாரப்பேட்டை போலீசில் 2 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்று தற்போது ரவுடி ரவீந்திரன் வெளியே வந்தார்.

இதனால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சி 2 வாரத்துக்கு முன்பு திருப்போரூரில் குடும்பத்துடன் ஒரு வாடகை வீட்டில் ரவீந்திரன் குடியேறினார். அங்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு ரவீந்திரன், தன் மனைவி மலருடன் திருப்போரூர் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர், ரவீந்திரனை பின் தொடர்ந்து வந்தனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தவுடன் ரவீந்திரனை வழி மறித்து 6 பேரும் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதை கண்டு அவருடைய மனைவி மலர் அதிர்ச்சியில் அலறினார். அவருடைய சத்தம் கேட்டு அப்பகுதியில் குடியிருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனே 6 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர். சிறிது நேரத்தில் ரவீந்திரன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் இறந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்புராஜ், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், தாழம்பூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் ரவீந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், ரவுடிகள் காக்காத்தோப்பு பாலாஜி கோஷ்டிக்கும், கல்வெட்டு ரவி கோஷ்டிக்கும் இடையே மோதல் இருந்து வந்தது தெரியவந்தது. எனவே காக்காத்தோப்பு பாலாஜி கோஷ்டியை சேர்ந்த ரவீந்திரனை, கல்வெட்டு ரவி கோஷ்டியினர் வெட்டி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்போரூர் பஸ் நிலையம் அருகே நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story