டீசல் ஆட்டோக்களை இயக்கக் கூடாது என்ற அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை


டீசல் ஆட்டோக்களை இயக்கக் கூடாது என்ற அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை
x
தினத்தந்தி 2 Dec 2017 4:57 AM IST (Updated: 2 Dec 2017 4:57 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் டீசல் ஆட்டோக்களை இயக்கக் கூடாது என்ற அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி டீசல் ஆட்டோக்கள் இயக்குவதற்கு கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனை எதிர்த்து பிரபல மோட்டார் வாகன நிறுவனங்கள் மற்றும் டீசல் ஆட்டோக்கள் விற்பனையாளர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். அந்த மனு மீதான இறுதி கட்ட விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி நாகரத்னா முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் குன்ஹண்ணா வாதிடும் போது “வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதுவும் டீசல் ஆட்டோக்களால் பெரிதும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த ஆட்டோக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. அதற்கு மாற்றாக கியாஸ் மூலம் ஓடும் ஆட்டோக்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது“ என்றார்.

அப்போது எதிர்தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், ‘அரசு பிறப்பித்துள்ள உத்தரவால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட டீசல் ஆட்டோக்களை விற்பனை செய்ய முடியாமல் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு போன்ற நகரங்களில் ஆட்டோக்களுக்கு கியாஸ் நிரப்புவது எளிதானது. அதுபோன்ற வசதிகள் மாநிலத்தின் பிற பகுதிகளில் இல்லை. எனவே டீசல் ஆட்டோக்களை இயக்கக்கூடாது என்ற அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,‘ என்றார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நாகரத்னா, டீசல் ஆட்டோக்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். ஆனால் கர்நாடகத்தின் மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி டீசல் ஆட்டோக்களுக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை. அதனால் டீசல் ஆட்டோக்களை இயக்கலாம் என்றார். மேலும் அரசு விதித்த உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.



Next Story