அன்புத் தூதர்கள்!


அன்புத் தூதர்கள்!
x
தினத்தந்தி 2 Dec 2017 1:39 PM IST (Updated: 2 Dec 2017 1:39 PM IST)
t-max-icont-min-icon

பெருநகரங்கள் எனும் ஜனக்கடலில், பிள்ளைகள் அருகில் இல்லாத வயதான முதியோர், தனிமைத் தீவில் வசிப்பவர்களாகவே உள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த மூதாட்டி மீனா நாகார்ஜுனன், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் ஓர் இளைஞரின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அந்த இளைஞரும் வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் தவறாது அவர் வீட்டில் ஆஜராகிவிடுகிறார்.

முகமலர்ச்சியுடன் வீட்டுக்குள் நுழையும் அந்த இளைஞர், மீனா, அவரது கணவர் நாகார்ஜுனனுடன் கலகலப்பாகப் பேசுகிறார், வீட்டில் சிறுசிறு அத்தியாவசிய வேலைகள் செய்கிறார், மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் செலுத்தப்பட்டிருக் கிறதா எனக் கவனித்து அவற்றைச் செலுத்துகிறார், அருகில் உள்ள மருந்தகத்தில் இருந்து தேவையான மருந்து, மாத்திரைகளையும், முதிய தம்பதிக்குப் பிடித்த உணவகத்தில் இருந்து பிடித்த உணவுகளையும் வாங்கிவந்து கொடுக்கிறார். சில மணி நேரத்தை இப்படிச் செலவழித்தபிறகு, ‘அடுத்த வாரம் வரு கிறேன்’ என்று விடைபெற்றுச் செல்கிறார்.

அந்த இளைஞர், இந்த சீனியர் சிட்டிசன் தம்பதியின் உறவினர் பையன் அல்ல, தெரிந்த பையனும் இல்லை.

அப்படியென்றால்?

இப்படி முதியவர்களுக்கு உதவுவதையும், அதன் மூலம் தங்களுக்கு என்று சிறு வருவாயையும் தேடிக்கொள்வதையும் ஒரு தொழிலாகத் தொடங்கியிருக்கும் இளைஞர் குழுவின் ஓர் அங்கம், மேற்படி இளைஞர்.

பெருநகரங்கள் எனும் ஜனக்கடலில், பிள்ளைகள் அருகில் இல்லாத வயதான முதியோர், தனிமைத் தீவில் வசிப்பவர்களாகவே உள்ளனர்.

எங்கோ தொலைதூரத்தில் பணிபுரியும் பிள்ளைகள், அவ்வப்போது தொலைபேசியில் பேசி விசாரித்தாலே அதிகம். இந் நிலையில்தான், இப்படி தனியே வசிக்கும் வயதானோருக்கு உதவுவதை ஒரு புதிய தொழில்முயற்சியாகவே தொடங்கியிருக் கிறார்கள் சில இளைஞர்கள்.

அவர்கள், முதியவர்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கிவருவது முதல், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற நேரிட்டால் கூடவே தங்கி கவனித்துக்கொள்வது, வீட்டுக்கு குழாய் பழுது நீக்குபவர், எலக்ட்ரீஷியன் போன்றோர் தேவைப்பட்டால் அழைத்துவந்து பழுதைச் சரிசெய்வது, வெளியே சாப்பிட அழைத்துச் செல்வது, திரைப்படம் பார்க்க கூட்டிச் செல்வது, எதுவுமே தேவையில்லை, எங்களுடன் அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தால் போதும் என்றால் ஜாலியாக உரையாடுவது வரை எல்லாம் செய்கிறார்கள் இந்த இளைஞர்கள்.

‘கவனிப்பு மேலாளர்கள்’ என்று அழைக்கப்படும் இந்த இளைஞர்கள், தனியே வசிக்கும் முதியவர்கள் வாழ்வில் ஒரு வசந்தத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள் என்பது நிஜம்.

உதாரணத்துக்கு, நிரஞ்சன் ஆச்சார்யா என்ற 72 வயது முதியவரை எடுத்துக்கொள்ளலாம். இவர் தனது மனைவியை 10 ஆண்டுகளுக்கு முன் இழந்துவிட்டார், தற்போது தனியே வசிக்கும் ஆச்சார்யாவுக்கு குழந்தைகளும் இல்லை, உறவினர்களும் இல்லை. இவர் எப்போதும் கைவசம் வைத்திருப்பது தனது ‘கவனிப்பு மேலாளரின்’ செல்போன் எண்ணைத்தான்.

திடீரென உடல்நிலை சீர்குலைந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டி வந்தபோது, ஆச்சார்யா முதலில் அழைக்கக்கூறியது அந்த இளைஞரைத்தான். அவரும் வந்தார், மருத்துவமனையில் ஆச்சார்யாவின் கூடவே இருந்து பொறுப்பாக பார்த்துக்கொண்டார், மருத்துவர்களின் ஆலோசனையையும் அக்கறையோடு கேட்டுக்கொண்டார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் ஆச்சார்யாவுக்கு பல் பிடுங்க நேர்ந்தபோது அவரை பல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அந்த வேலையை முடித்து, பின் மருந்து, மாத்திரைகளுடன் வீடு கொண்டு வந்து சேர்த்து, தகுந்த அறிவுறுத்தல்களை அன்போடு கூறிச்சென்றவர், அவரது ‘கவனிப்பு மேலாளர்’தான்.

“அந்தத் தம்பி எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறார். எனக்கு சமவயது தோழர்கள் சிலர் இருக்கிறார்கள் என்றாலும், அவர்களால் என்னுடன் மருத்துவமனையில் வந்து தங்க முடியாது. இந்நிலையில் அந்தத் தம்பி மட்டும் இல்லாவிட்டால் நான் ரொம்பவே சிரமப்பட்டுப் போயிருப்பேன்” என்கிறார்.

இந்தக் குழுக்கள் முழுக்க முழுக்கச் சேவை அடிப்படையில் இப்பணியைச் செய்யவில்லை, ஒரு நியாயமான ஊதியம் பெற்றுக்கொள்கிறார்கள் என்றாலும், அவர்கள் தங்கள் உழைப்பையும் நேரத்தையும் செலவிடுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் இவர்களின் பணி நிச்சயம் ஒரு சேவைதான்.

இந்தியாவில் தற்போது 7.5 சதவீதமாக உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை, 2025 வாக்கில் 11.1 சதவீதமாக உயருமாம். இந்நிலையில்தான் இதுபோன்ற குழுக்களின் அவசியம் புரியும்.

“யாருக்கும் பயனில்லாது, பூமிக்குப் பாரமாக வாழ்கிறோமோ என்ற வருத்தம் பல பெரியவர்கள் மனதில் உள்ளது. அதைத்தான் நாங்கள் முக்கியமாக போக்குகிறோம். தனிமையில் வாடும் முதியோருக்கு, எங்கள் அருகாமையே பெரும் ஆறுதலாக இருக்கிறது” என்கிறார், இந்த இளைஞர்களில் ஒருவரான சந்தோஷ் ஆபிரகாம்.

சந்தோஷம்தான்! 

Next Story