மழைக்கால நடமாடும் மருத்துவ முகாம் இன்பதுரை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கடந்த 30–ந் தேதி அனுமன் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது.
பணகுடி,
கடந்த 30–ந் தேதி அனுமன் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் சேதம் அடைந்தன.
அதனை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையம் சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கியது. வட்டார அரசு மருத்துவ அலுவலர் கோலப்பன் தலைமையில் டாக்டர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். சுமார் 300 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர்.
மேலும் பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மழைக்கால நடமாடும் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது. அதன்படி 40 வாகனங்களில் மருத்துவ குழுவினர் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இன்பதுரை எம்.எல்.ஏ. கொடி அசைத்து, மருத்துவ குழு வாகனங்களை தொடங்கி வைத்தார். மாவட்ட சுகாதார இணை இயக்குனர் வடிவேலு, துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.