சிலைகள் மாயம்: பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் ஆய்வு


சிலைகள் மாயம்: பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் ஆய்வு
x
தினத்தந்தி 3 Dec 2017 4:45 AM IST (Updated: 3 Dec 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு செய்தார்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பல்வேறு கோவில்களுக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 6 சிலைகள் மாயமாகின. இதுதொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் கஜேந்திரன் உள்பட 4 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிலைகள் மாயமானது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் குமார், இளங்கோவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், ரவிச்சந்திரன், கோவில் செயல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் இருந்தனர்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

10 கிராமங்களில் உள்ள 21 கோவில்களுக்கு சொந்தமான 137 சிலைகளை இதுவரை அடையாளப்படுத்தி உள்ளோம். மேலும் 5 கிராமங்களில் உள்ள கோவில்களின் சிலைகளை அடையாளப்படுத்த வேண்டி உள்ளது. பந்தநல்லூர் அருகே இடும்பேஸ்வரர் கோவிலில் உள்ள மாணிக்கவாசகர் சிலை தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம். திருமங்கைச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆபரணங்கள், கவசம் என 54 வகையான விலை மதிப்பு மிக்க பொருட்கள் உண்டு. ஆனால் இவற்றில் 3 பொருட்கள் மட்டுமே இருப்பதாக கூறுகிறார்கள். இதுபற்றியும் விசாரிக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story