ஆர்.கே. நகர் தேர்தலில் மதுசூதனன் வெற்றி பெறுவார்: அமைச்சர் துரைக்கண்ணு பேட்டி
ஆர்.கே. நகர் தேர்தலில் மதுசூதனன் வெற்றி பெறுவார் என்றும், 2 அணியினரும் மனநிறைவோடு பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.
கும்பகோணம்,
கும்பகோணத்தில் 23 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், தாசில்தார் மாணிக்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ ராம.ராமநாதன், கும்பகோணம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் அமைச்சர் துரைக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சோழன்மாளிகை கிராமத்தில் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது.
ஆர்.கே. நகர் தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை. அங்கு நடைபெற உள்ள தேர்தலில் மதுசூதனன் வெற்றி பெறுவார். அதற்காக அ.தி.மு.க.வில் இரு அணியினரும் ஒற்றுமையாக, மனநிறைவோடு தேர்தல் பணியாற்றி கொண்டிருக்கிறோம். ஆர்.கே. நகர் தேர்தல் வெற்றி உறுதியாகி விட்டது. எங்களை பொறுத்தவரை அவர் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டார். இப்போது நாங்கள் எதிர்பார்ப்பது மதுசூதனன் வெற்றி பெறப்போவது 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலா? அல்லது அதற்கும் மேலா? என்பது தான். அம்ருதா குறித்து கட்சியின் தலைமை பதில் சொல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.