ஓ.பன்னீர்செல்வமும், நானும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல செயல்படுவோம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
ஓ.பன்னீர்செல்வமும், நானும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல செயல்படுவோம் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பெத்தநாயக்கன்பாளையம்,
ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வரவேற்றார். கள்ளக்குறிச்சி தொகுதி காமராஜ் எம்.பி., ஆத்தூர் சின்னத்தம்பி எம்.எல்.ஏ., பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர்கள் ரமேஷ், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
அ.தி.மு.க.விற்கு எப்போதும் வெற்றிதான் கிடைக்கும். ஜெயலலிதாவின் அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு. நான் சாதாரண தொண்டனாக இருந்து படிப்படியாக உயர்ந்தவன். அதே போல ஓ.பன்னீர்செல்வமும் படிப்படியாக உயர்ந்து துணை முதல்–அமைச்சராக உள்ளார். நாங்கள் இரண்டு பேரும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல செயல்படுவோம். இதைக்கூட மு.க.ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கட்சி பிரிந்து இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்து விடலாம் என்றும், தி.மு.க. சர்வாதிகாரியாக செயல்படலாம் என்றும் நினைத்து இருந்தனர். அதற்கு மக்களும், தொண்டர்களும் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.
நிர்வாகிகள் ஒன்றாக சேர்ந்ததால் இரட்டை இலை சின்னம் கிடைத்தது. ஒரு இலை நான், இன்னொரு இலை ஓ.பன்னீர்செல்வம். இந்த உண்மையை பொதுமக்களும், தொண்டர்களும் ஏற்றுக் கொண்டு உள்ளனர். தி.மு.க.வில் கூட மு.க.ஸ்டாலினால் தலைவராக முடியவில்லை. செயல்தலைவராக மட்டுமே ஆக முடிந்தது. நீங்கள் உங்கள் தந்தை வழியில் வந்தவர்கள். நான் சாதாரண கிராமத்தில் இருந்து 43 ஆண்டுகாலம் கட்சி பணியாற்றி படிப்படியாக உயர்ந்து வந்துள்ளேன். உங்களுக்கும், எங்களுக்கும் வேறுபாடு உண்டு.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதில் மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் தங்கமணி, ஏ.டி.அர்ச்சுனன், மாவட்ட அவைத்தலைவர் குருசாமி, பொருளாளர் ஜெகதீசன், பெத்தநாயக்கன்பாளையம் பேரூர் செயலாளர் செல்வம், ஏத்தாப்பூர் ராஜமாணிக்கம், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் அருண்குமார், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய முன்னாள் தலைவர் அன்பரசு, முன்னாள் துணை தலைவர் அப்பாவு, உமையாள்புரம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செல்லியம்பாளையத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் ரஞ்சித்குமார் வரவேற்றார். இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாரதியார் கல்வி நிறுவன செயலாளர் மஞ்சினி ஏ.கே.ராமசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் பொன்னம்மாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் சேகர், ஒன்றிய துணை செயலாளர் பெரியசாமி, முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர் கோபி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராமச்சந்திரன், கீரிப்பட்டி பேரூராட்சி செயலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.