பெரியார் இயக்கங்கள் ஒன்றிணைந்து ஆரிய சூழ்ச்சிகளை வீழ்த்துவோம்; கி.வீரமணி பேட்டி


பெரியார் இயக்கங்கள் ஒன்றிணைந்து ஆரிய சூழ்ச்சிகளை வீழ்த்துவோம்; கி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 3 Dec 2017 4:45 AM IST (Updated: 3 Dec 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

‘பெரியார் இயக்கங்கள் ஒன்றிணைந்து ஆரிய சூழ்ச்சிகளை வீழ்த்துவோம்‘ என்று பிறந்தநாள் விழாவில் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கி.வீரமணி கூறினார்.

ஈரோடு,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 85–வது பிறந்தநாள் விழா, விடுதலை சந்தா வழங்கும் விழா, சாதி ஒழிப்பு (சட்ட எரிப்பு) போராட்ட 60–ம் ஆண்டு நிறைவு நினைவு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று ஈரோட்டில் நடந்தது. திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து சென்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடங்கிய கோவை கு.ராமகிருஷ்ணன் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தி.க. தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் எனது பிறந்தநாள் விழாவை கொண்டாடி, பெரியார் தொண்டர்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சாதி வெறி, மதவெறி, பதவி வெறி ஆகிய வெறிகளுக்கு எதிராக பெரியார் போராடினார். சாதியற்ற, ஊழலற்ற, தீண்டாமை ஒழிந்த, பெண்ணடிமை நீங்கிய, சுயமரியாதை கொண்ட, மானமும் அறிவும் கொண்ட சமுதாயம் உருவாக பெரியாரின் தொண்டர்கள் ஒருங்கிணைந்து, ஒன்று பட்டு குரல் கொடுப்போம் என்பதை கு.ராமகிருஷ்ணன் உள்பட பலர் இங்கு உணர்த்தி இருக்கிறார்கள்.

பெரியார் இயக்கங்கள் ஏதோ பலவீனம் அடைந்து விட்டது போன்ற பிரசாரத்தை எதிரிகள் பரப்பி வருகிறார்கள். கத்திரிக்கோலின் 2 பிளேடுகள் தனித்தனியாக இருந்தாலும் அவை நறுக்க வேண்டியவற்றை சரியாக நறுக்கி விடும்.

நீர் அடித்து நீர் விலகுவதில்லை. பெரியார் இயக்கங்கள் ஒன்றிணைந்து ஆரிய சூழ்ச்சிகளை வீழ்த்துவோம். சாதி, தீண்டாமை, பெண்அடிமை, மூடநம்பிக்கை ஆகியவற்றை ஒழிப்போம்.

இவ்வாறு தி.க.தலைவர் கி.வீரமணி கூறினார். பேட்டியின் போது தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உடன் இருந்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் கூறியதாவது:–

இன்றைய சூழலில் இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்துத்துவா வகுப்புவாத சக்திகள் கடுமையாக சூழ்ந்து இருக்கிறது.

இந்த நிலையில் பெரியார் இயக்கங்கள் காணாமல் போய்விட்டதாக இந்துத்துவா சக்திகள் பிரசாரம் செய்கிறார்கள். எந்த நிலையிலும் பெரியார் தோற்கமாட்டார். பெரியார் தொண்டர்களும் தோற்க மாட்டோம். தமிழ் மக்களுக்காக, தமிழ்நாட்டுக்காக தேவைப்படும் நேரத்தில் இணைந்து செயல்படுவோம். ஒன்றிணைவோம். தமிழ்நாட்டில் நிச்சயம் பெரியாரை தாண்டி எந்த சக்திகளும் வெற்றி பெற முடியாது.

இவ்வாறு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறினார்.

திராவிடர் கழகத்துடன் தந்தை பெரியார் திராவிடர் கழகம் இணைக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘30 ஆண்டுகளுக்கு முன்பு தி.க. தலைவர் கி.வீரமணியிடம் இருந்து பிரிந்து வந்தோம். தற்போது காலத்தின் தேவை ஏற்படும் என்றால் எதுவும் சாத்தியமாகும்’ என்றார்.


Next Story