வாரிய தலைவர்கள் பதவி நீட்டிப்பு விவகாரம்: கவர்னர் பதவி விலகி இருக்க வேண்டும் எம்.என்.ஆர். பாலன் எம்.எல்.ஏ. பேட்டி


வாரிய தலைவர்கள் பதவி நீட்டிப்பு விவகாரம்: கவர்னர் பதவி விலகி இருக்க வேண்டும் எம்.என்.ஆர். பாலன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 3 Dec 2017 4:45 AM IST (Updated: 3 Dec 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

வாரிய தலைவர்கள் பதவி நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு தார்மீக பொறுப்பேற்று கவர்னர் பதவி விலகி இருக்க வேண்டும் என்று எம்.என்.ஆர். பாலன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேருக்கும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கும் மீண்டும் வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான சிவா, கீதா ஆனந்தன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விஜயவேணி, தனவேலு ஆகியோர் மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான எம்.என்.ஆர்.பாலன் வாரியத்தலைவர் பொறுப்பினை ஏற்கவில்லை. வாரிய தலைவர் பதவிக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பாக கவர்னரை சந்தித்து விளக்கம் கேட்க இருப்பதாக அவர் கூறினார். இதையொட்டி நேற்று காலை நிருபர்களுக்கு எம்.என்.ஆர். பாலன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கவர்னர் விதித்துள்ள நிபந்தனைகளின்படி வாரியத்தலைவர் பதவியில் செயல்பட முடியாது. இந்த பிரச்சினையில் கவர்னரின் முடிவை மத்திய அரசு தவறு என கூறிய பிறகு அவர் தார்மீக அடிப்படையில் பதவி விலகி இருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைச்சரவையை கூட்டி விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்கிறது. அதனை கவர்னர் தடுத்தார்.

விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்த பிரச்சினையில் கவர்னர் எடுத்த முடிவு தவறு எனக்கூறி மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. இதே போல் வாரியத்தலைவர்கள் பதவி விவகாரத்திலும் கவர்னரின் முடிவை மத்திய அரசு மாற்றி உள்ளது. இதன் பிறகும் கவர்னர் கிரண்பெடி பதவியில் நீடிப்பது முறையல்ல. அவரே முன்வந்து பதவி விலகி இருக்க வேண்டும். இதற்காக கவர்னர் புதுவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story