அறிவும் அழகும் கலந்த கலவை-மனுஷியின் மறுபக்கம்


அறிவும் அழகும் கலந்த கலவை-மனுஷியின் மறுபக்கம்
x
தினத்தந்தி 3 Dec 2017 12:05 PM IST (Updated: 3 Dec 2017 12:05 PM IST)
t-max-icont-min-icon

இவர் புதிய உலக அழகி என்பது பலருக்கும் தெரியும். எதிர்கால மருத்துவர், ஓவியர், கவிஞர், நடனக் கலைஞர் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

வர் புதிய உலக அழகி என்பது பலருக்கும் தெரியும். எதிர்கால மருத்துவர், ஓவியர், கவிஞர், நடனக் கலைஞர் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

மனுஷியின் தாய்வழி தாத்தா- பாட்டி வசிக்கும் அரியானா மாநிலம் ரோத்தக்கில் சந்தோஷம் பொங்கி வழிகிறது. வருபவர் களுக்கு எல்லாம் தங்கள் மகிழ்ச்சியை இனிப்பு வழங்கி கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள், மனுஷியின் தாத்தா சந்தர்சிங்கும், பாட்டி சாவித்திரி ஷெராவத்தும். இவர்கள் ஒரு ரகசியம் சொல் கிறார்கள். மனுஷிக்கு உலக அழகிப் பட்டம் அறிவிக்கப்பட்டபோது அவர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாலும், உலக அழகி கிரீடத்துடன் வீடு திரும்பும் நம்பிக்கை அவருக்கு ரொம்பவே இருந்ததாம்.

மனுஷியின் மாமா சந்தீப் ஷெராவத், ‘‘உலக அழகிப் பட்டம் அறிவிக்கப்படும் நிகழ்ச்சிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, ஆடம்பரக் காரின் அருகே நிற்கும் தனது படத்தை மனுஷி அனுப்பியிருந்தாள். அதனுடன், ‘இந்தக் காருடனும், உலக அழகிப் பட்டத்துடனும் நான் வீடு திரும்புவேன்’ என்ற குறிப்பும் இருந்தது. அதிலிருந்து அவளின் தன்னம்பிக்கை புரியும்’’ என்றார்.

தற்போது 21 வயதாகும் மனுஷி, தனது 16 வயதில் இருந்தே உலக அழகி கனவுக்காக தன்னைத் தயார்ப்படுத்தி வந்திருக்கிறார்.

‘‘தனது தோற்றம் எப்படி இருக்கிறது, தன்னுடைய அழகைக் காக்க என்னென்ன உணவுகள் உட்கொள்ள வேண்டும் என்பதில் மனுஷி எப்போதும் கவனமாக இருப்பாள். தான் அழகாக இருக்கிறேனா, தன்னுடைய சருமப் பொலிவு கெடாமல் இருப்பதற்கு தகுந்த உணவுகளை உண் கிறேனா என்று அவள் தனது பாட்டியைக் கேட்டுக்கொண்டே இருப்பாள்’’ என்கிறார், தாத்தா சந்தர்சிங்.

இப்படி அழகாகத் தோன்றுவதிலும், பேஷனிலும் மனுஷி அதிக ஆர்வம் காட்டினாலும், அழகிப் போட்டிகளில் அவர் மிகுந்த நாட்டத்துடன் இருக்கிறார் என்பது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியாது என்றும் அவர் சொல்கிறார். அதற்கு காரணம், அழகு ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும், மனுஷி படிப்பிலும் சிறந்த மாணவியாக திகழ்ந்தார்.

தனது பெற்றோரைப் பின்பற்றி, தானும் மருத்துவர் ஆகும் பாதையில் மனுஷி நடைபோட்டார். சோனேபட்டில் உள்ள பகத்பூல் சிங் அரசு மகளிர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலத் தொடங்கினார்.

ஒரு சிறந்த இதய அறுவைசிகிச்சை நிபுணராக வேண்டும் என்பது மனுஷியின் ஆசை. ஆனால் தனது இன்னொரு கனவான, உலக அழகிப் பட்டத்துக்காக மருத்துவப் படிப்புக்குக் கொஞ்சம் இடைவெளி விட்டிருக்கிறார்.

மனுஷியின் தந்தை டாக்டர் மித்ர பாசு சில்லர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணிபுரிகிறார், தாய் நீலம் சில்லர் மனித நடத்தையியல் மற்றும் சார் அறிவியல் கல்லூரியில் நரம்புவேதித் துறை தலைவராக உள்ளார்.

மனுஷியின் அக்காள் முதுநிலை சட்டப் படிப்பு பயில் கிறார், இவரது தம்பி 9-ம் வகுப்பு மாணவர்.

மனுஷியின் குடும்பம், மித்ர பாசு சில்லரின் பணியிட மாற்றம் காரணமாக பெங்களூருவில் இருந்து ரோத்தக்குக்கு 1999-ல் இடம்பெயர்ந்தது. 2004-ம் ஆண்டு அங்கிருந்து டெல்லிக்குக் குடிபெயர்ந்தனர். அங்குள்ள செயின்ட் தாமஸ் பள்ளியில்தான் மனுஷி படித்தார்.

பள்ளி நாட்களில் இருந்தே மனுஷி ஒரு கடும் உழைப்பாளி என்று சான்றிதழ் வழங்குகிறார், தாத்தா சந்தர் சிங்.

பன்னிரெண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் முதலிடம் பெற்ற மனுஷி, மருத்துவ நுழைவுத் தேர்விலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.

‘‘தான் ஈடுபடும் எதையுமே கவனமாகச் செய்வது மனுஷியின் வழக்கம். படிப்பில்லாத வேளைகளிலும் அவர் எதையாவது பிசியாக செய்துகொண்டிருப்பாள். மனுஷி அமைதியான பொண்ணுதான். ஆனால் கூச்ச சுபாவி அல்ல’’ என்று தாத்தா சொல்கிறார்.

நேரத்தை வீணாக்காமல், எப்போதும் எதிலாவது ஈடுபட்டுக்கொண்டிருக்கும் குணம் மனுஷிக்கு அவரது அம்மாவிடம் இருந்து வந்ததாம். தாய் நீலம்தான், மகள் களுக்கு ஓவியத்தில் ஈடுபாடு ஏற்படச் செய்திருக்கிறார்.

‘‘மனுஷிக்கும் அவளது அக்காவுக்கும் அவங்கம்மாதான் வர்ணங்கள் வாங்கிக் கொடுப்பார். தான் வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கும்போது, மகள்கள் ஓவியம் தீட்டுவதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பது அம்மாவின் அறிவுரை. முறைப்படியான பயிற்சி இன்றியே மனுஷி ஓவியத்தில் தேர்ச்சி பெற்றார். இன்றுவரை அதை விடாது தொடர்கிறார்’’ என்று கூறும் பாட்டி, சுவரை அலங்கரிக்கும் மனுஷியின் முதல் ஓவியத்தை பெருமையோடு சுட்டிக்காட்டுகிறார்.

மனுஷியின் இன்னொரு பக்கம், அவரது தற்காப்புக்கலை திறன். சிறுவயதிலேயே தற்காப்புக்கலை பயிற்சி பெற்ற இவர், 7 வயதில் மாநில அளவிலான சப்-ஜூனியர் தற்காப்புக் கலை போட்டியில் பங்கேற்றுப் பரிசு பெற்றிருக்கிறார். புகழ்பெற்ற நடனமணி ராதா ரெட்டியிடம் குச்சிப்புடி நடனமும் மனுஷி கற்றிருக்கிறார்.

மனுஷி தனது டீனேஜ் பருவத்திலேயே கவிதை படைக்கவும் தொடங்கிவிட்டாராம்.

‘‘மனுஷி தனது குருவாகக் கருதும் அம்மாவைப் போற்றியே அனேக கவிதைகள் எழுதியிருக் கிறார்’’ என்று மனுஷியின் கல்லூரித் தோழியும் சக அறைவாசியுமான ஸ்மிருதி காஸா கூறுகிறார். மனுஷி மிகவும் பொறுப்பான பெண் என்று இவர் சொல்கிறார்.

‘‘அவள், அறையை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்வாள். தனது காலணிகளைக் கூட தனித்தனி பாலிதீன் உறைகளில்தான் போட்டுவைப்பாள்’’ என்கிறார்.

உலக அழகி பட்டம் மனுஷியின் அழகுப் பயணத்தின் உச்சம் என்றாலும், கல்லூரியில் புதிய மாணவிகளுக்கான பார்ட்டியில் ‘அதிரடி அழகி’, ‘வளாக இளவரசி’, ‘மிஸ் அரியானா’, ‘மிஸ் இந்தியா’ என்று இந்த ஆண்டு வரிசையாக பட்டங்களை குவித்துவந்திருக்கிறார்.

மனுஷியின் சக மாணவிகள் மட்டுமல்ல, அவரது பேராசிரியர்களும் அவரைப் புகழ்கின்றனர்.

‘‘அழகிப் போட்டியில் கலந்துகொள்ளப் போகிறேன் என்று மனுஷி கூறியபோது, அவரால் எப்படி அழகிப்போட்டிக்கான தயாரிப்புகளுடன் படிப்பைச் சமாளிக்க முடியும் என்று நான் யோசித்தேன். ஆனால் கல்லூரியில் படிப்பில் ஜொலித்ததுடன் உலக அழகிப் போட்டியிலும் கலக்கிவிட்டார். அழகும் அறிவும் இணைந்த பெண்ணுக்கு அவர்தான் சரியான உதாரணம். கடுமையாக உழைப்பதற்கு அவர் எனக்கு ஊக்கமாக விளங்குகிறார்’’ என்று மனுஷியின் பேராசிரியர்களுள் ஒருவரான டாக்டர் மன்ஜீத் சிங் கூறுகிறார்.

உலக அழகி டாக்டரை வரவேற்க மருத்துவ உலகம் தயாராகட்டும்!

Next Story