குடும்பம் ஒரு கலைக் கதம்பம்


குடும்பம் ஒரு கலைக் கதம்பம்
x
தினத்தந்தி 3 Dec 2017 12:33 PM IST (Updated: 3 Dec 2017 12:32 PM IST)
t-max-icont-min-icon

நகைப் பட்டறையில் தனது பணிகளை செய்துவிட்டு வீடு திரும்பி, குடும்பத் தலைவராக தனது கடமையை செய்கிறார் யு.எம்.டி.ராஜா (வயது 47).

கைப் பட்டறையில் தனது பணிகளை செய்துவிட்டு வீடு திரும்பி, குடும்பத் தலைவராக தனது கடமையை செய்கிறார் யு.எம்.டி.ராஜா (வயது 47). இதற்கிடையில் தன்னிடம் உள்ள கலைத்திறமையை வெளிப்படுத்த சினிமாவிலும் நடிக்கிறார். கையில் கிடைக்கும் கழிவுப்பொருட்களை பயன்படுத்தி கலைசிந்தும் சிற்பங்கள், ஓவியங்களையும் படைக்கிறார். அவரது மனைவி ராதிகா (வயது 46) குடும்பப் பொறுப்புகளை கவனித்தபடியே சின்னத்திரையிலும், வண்ணத்திரையிலும் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய் கிறார். வீட்டில் பிள்ளைகள் மற்றும் மாமியாரை பொறுப்புடன் கவனித்துக்கொள்ளவும் செய்கிறார்.

பிளஸ்-2 முடித்து விட்டு கண் சம்பந்தமான தொழில்நுட்ப படிப்பை படித்துக்கொண்டே வீட்டுக்கு வந்து, டியூசன் நடத்துகிறார், அவர்களது மூத்த மகள் காவியா. சின்னத்திரை சீரியல்களில் அவரும் தனது நடிப்புத் திறமையை காட்டி வருகிறார். அவரது தங்கை பிளஸ்-2 மாணவியான அபி நயாவும் டெலிவிஷனில் நடிக்கிறார்.

இப்படி கதம்பமாக ஜொலிக்கிறது இந்த கலைக்குடும்பம். இவர்கள் கோவையில் வசிக்கிறார்கள். குடும்பத்தலைவரான ராஜாவிடம் பேசுவோம்:

“நான் பள்ளி மாணவனாக இருந்தபோதே என் பெயரை யு.எம்.டி.ராஜா என்று வைத்துக்கொண்டேன். இதில் ராஜா என்பது எனது இயற்பெயர். யு.எம்.டி.என்றால் ‘உன்னால் முடியும் தம்பி’ என்று அர்த்தம். அதற்கான முதல் ஆங்கில எழுத்துக்கள்தான் அவை. இந்த எழுத்துக்களை எனது உடலில் பச்சைக்குத்திக்கொண்டு எங்கள் பகுதியில் சமூக சேவைகளில் ஈடுபட தொடங்கினேன். என்னுடன் ஒரு இளைஞர் பட்டாளம் சேர ஆரம்பித்தது. அவர்களுடன் சேர்ந்து முதியோர் களுக்கு உதவி செய்தல், அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளை நடத்துதல், நாடகம், நடனம் மூலம் இளைஞர்களின் திறமையை வெளியே கொண்டுவருதல், வேலை இல்லாத இளைஞர் களுக்கு எனக்கு தெரிந்த நகைப்பட்டறை தொழிலை கற்றுத்தருதல், யோகாசனம் சொல்லிக்கொடுப்பது என்று எங்களது சேவை தொடர்ந்தது. கழிவுப் பொருட்களை கலைப்பொருட்களாக மாற்றவும் செய்வேன். தங்கம் மற்றும் வெள்ளியில் மிகக்குறைந்த மில்லி கிராமில் பல்வேறு கலைப்பொருட்களையும் படைத்துள்ளேன். தேசிய தலைவர்களின் உருவங்களையும் அதில் உருவாக்கியுள்ளேன். சமீபத்தில் ஜல்லிக்கட்டு பற்றி நான் வரைந்த ஓவியம் பலரையும் கவர்ந்து பாராட்டு பெற்றுத்தந்தது.

திருமணத்திற்கு பிறகு என் மனைவி ராதிகாவும் எனது கலைப் பயணத்திற்கு துணையானார். எங்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். அவர்களை நல்லமுறையில் வளர்க்கவேண்டிய பொறுப்பு உருவானது. எனது தந்தை சக்திவேல் இறந்த பிறகு, தாயார் ஜோதிமணியை கவனிக்க வேண்டிய பொறுப்பையும் ஏற்றுக்கொண்டோம். அதனால் குடும்பச் செலவுக்கு பணப் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது எனக்கு நகைப்பட்டறை தொழிலில் தொடர்ச்சியாக வேலை இல்லாத நிலையும் நீடித்தது. அதனால் எனது மனைவி தனியார் கூரியர் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார். அந்த வருமானத்தில் ஓரளவு குடும்ப செலவினத்தை சமாளித்தோம்.

சிறுவயதில் இருந்தே என்னிடம் நடிப்பாற்றல் இருந்தது. அதனால் எங்கள் பகுதியில் படப் பிடிப்புக்கு திரை உலக குழுக் களோடு நான் அறிமுகமானேன். அவர்களது உதவியால் சின்னச்சின்ன வேடங்களில் சினிமாவில் நடித்தேன். சமீபத்தில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தப்பாட்டம் சினிமா வெளியானது.

இதற்கிடையில் என் மனைவியின் கலைப் பயணமும் தொடங்கியது. பிரபல சின்னத்திரை இயக்குனர் ஒருவர் எங்கள் பகுதியில் டி.வி. சீரியலுக்கு தேவையான நடிகர், நடிகைகளை தேர்வு செய்தார். அதில் எனது மனைவி கலந்து கொண்டு தேர்வானார். நாதஸ்வரம், குலதெய்வம் போன்ற சீரியல்களை தொடர்ந்து என் மனைவிக்கு நடிப்பு வாய்ப்புகள் கிடைத்துவருகின்றன. அதன் மூலம் நிலையான சம்பளம் கிடைக்கிறது. கூரியர் நிறுவன வேலையை விட்டுவிட்டார்.

இந்த நிலையில் எங்கள் மகள்களும் அவ்வப்போது டி.வி.சீரியல்களில் நடிக்க தொடங்கினார்கள். இருவரும் படித்துக்கொண்டே நடிக்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்து, படிப்புக்கு பயன்படுத்துகின்றனர். இளைய மகள் அபிநயா 10 வயதிலேயே கலக்க போவதுயாரு, விஜய் டி.வி.யின் பலகுரல் நிகழ்ச்சி, மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இதனால் எங்கள் குடும்பமே கலைக் குடும்பமாகிவிட்டது. நான் நகைப் பட்டறையில் வேலை செய்துகொண்டே நடித்து வருகிறேன். தொடர்ந்து கலைப் படைப்புகளை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டிவருகிறேன்” என்றார்.

Next Story