கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளச்சேத பகுதிகளை நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்


கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளச்சேத பகுதிகளை நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 4 Dec 2017 4:45 AM IST (Updated: 3 Dec 2017 11:49 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளச்சேத பகுதிகளை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறினார்.

கன்னியாகுமரி,

‘ஒகி’ புயலால் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று குமரி மாவட்டம் வந்தனர்.

நிர்மலா சீதாராமன் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் நேற்று மாலை வந்து இறங்கினார்.

பின்னர் அவர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு இருந்த துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் சுமார் அரை மணி நேரம் நடந்தது. இதில் அமைச்சர்கள் ஜெயகுமார், உதயகுமார், தங்கமணி, விஜயகுமார் எம்.பி. ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பின்னர் நிர்மலா சீதாராமன் சேத பகுதிகளை பார்வையிட சுசீந்திரம் பகுதிக்கு புறப்பட்டு சென்றார். அங்குள்ள கவிமணி நகர், தாணுமாலயநகர், கற்காடு ஆகிய பகுதிகளில் வெள்ளச்சேதங்களை பார்வையிட்டார்.

அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, ஆறுதல் கூறி அவர் பேசியதாவது:–

என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்துள்ளீர்கள். அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வேன். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முக்கிய பணி காரணமாக வெளிநாட்டுக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவரை அரசு வெளிநாட்டுக்கு அனுப்பி இருக்கிறது. அவர் வெளிநாடு செல்வதற்கு முன் என்னை சந்தித்தார்.

எனினும், கடலோர காவல்படை, கடற்படை மத்திய ராணுவ அமைச்சகத்தின் கீழ் இருப்பதால் கண்டிப்பாக நானும் இங்கு வந்தாக வேண்டும். அதே நேரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் அங்கிருந்து என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, கட்டாயமாக குமரி மாவட்டம் சென்று மக்களை சந்திக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் திருப்பதிசாரம் அருகே உள்ள நெசவாளர் காலனிக்கு இரவு 7.30 மணி அளவில் சென்றார். அங்கு துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் சென்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினர். ராணுவ மந்திரியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

பின்னர் அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு இருந்த நிவாரண முகாமில் தங்கி இருந்த மக்களை சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறி குறைகள் கேட்டறிந்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘புயல்–மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக உங்களை சந்திக்க பிரதமர் மோடி என்னை இங்கு அனுப்பி உள்ளார்’’ என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து முகாமில் உள்ளவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

நிர்மலா சீதாராமன்–ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியது தொடர்பாக அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:–

குமரி மாவட்டத்தில் இயற்கை பேரிடர் நிகழ்வதால், மீனவர்களுக்கு அதுதொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்க வசதியாக இந்திய கடற்படையும், கடலோர காவல்படையும் இணைந்து பேரிடர் முன் அறிவிப்பு தகவல் மையம் ஒன்றை தூத்தூர் சின்னத்துறையில் மத்திய அரசு அமைக்கவேண்டும் என்று ராணுவ மந்திரியிடம், துணை முதல்–அமைச்சர் வலியுறுத்தினார்.

பேரிடர் நிகழும்போது மீன்பிடிக்கச் சென்று கடலில் மாயமான மீனவர்களையும், நடுக்கடலில் சிக்கித்தவிக்கும் மீனவர்களையும் மீட்பதற்கு குமரி மாவட்டத்தில் மத்திய அரசு நிரந்தர ஹெலிகாப்டர் தளம் அமைக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story