கன்னிவாடி அருகே ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி தற்கொலை தம்பியும் தீயில் கருகி பலி
கன்னிவாடி அருகே பரிதாபம்: தீக்குளித்து ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி தற்கொலை தம்பியும் தீயில் கருகி பலி.
கன்னிவாடி,
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்தவர் குணசேகரன். அவருடைய மனைவி அமுதவள்ளி. இவர்களுக்கு கங்காதேவி (வயது 20) என்ற மகளும், அருண்குமார் (14), யோகேஸ்வரன் (10), பிரகலாதன் (7) ஆகிய 3 மகன்களும் உள்ளனர். இதில், கங்காதேவி ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கங்காதேவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் குணசேகரனும், அமுதவள்ளியும் வெளியில் சென்றிருந்தனர்.
அப்போது கங்காதேவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கங்காதேவி வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தனது அக்காள் மீது தீ பற்றி எரிவதை கண்ட பிரகலாதன் ஓடி சென்று தனது அக்காளை கட்டிப்பிடித்தான். இதனால் அவன் மீதும் தீ பற்றியது. சிறிது நேரத்தில் அக்காள்– தம்பி இருவரும் தீயில் கருகி இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கன்னிவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.