ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம் டி.டி.வி. தினகரன் பேட்டி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் அதனை மக்கள் மனதில் பிரபலப்படுத்தி வெற்றி பெறுவோம் என டி.டி.வி. தினகரன் கூறினார்.
மதுரை,
ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான இடங்கள் சேதம் அடைந்துள்ளன. அந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் டி.டி.வி. தினகரன் மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதற்கு நான் தான் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் நான் காரணம் கிடையாது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், தேர்தலில் போட்டியிடலாம். ஆர்.கே.நகரில் போட்டியிடும் மதுசூதனன் தோல்வி பெறுவது உறுதியாகி விட்டது.
இந்த தேர்தலில் வெற்றி பெற வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க மாட்டோம். எடப்பாடி பழனிசாமி அரசு, பண பட்டுவாடா செய்தால் எங்கள் தொண்டர்களும், விஷால் ரசிகர்களும் அதனை தடுப்பார்கள். எடப்பாடி அணியினர் நடத்தும் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் வருவதில்லை. ஆனால் அவர்கள் கூவி,கூவி மக்களை கூப்பிடுகிறார்கள். ஆட்சியில் இருப்பதால் மக்கள் பணத்தை செலவு செய்து மக்களை திரட்டுகிறார்கள். தற்போது கோவையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு கூட இப்படிதான் ஆட்கள் சேர்க்கிறார்கள்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட ஆள் இல்லாமல் போய்விட்டது. ஆர்.கே.நகரில் எங்களுக்கு தொப்பி சின்னம் கிடைக்காவிட்டாலும் வெற்றி பெறுவோம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இதற்கு முன்பு, தொப்பி சின்னம் கொடுத்த 15 நாட்களிலேயே அதனை நாங்கள் மக்கள் மனதில் பிரபலப்படுத்தினோம். எங்களுக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் அதனை மக்கள் மனதில் பிரபலப்படுத்தி வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.