தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்ற விஷாலின் கனவு நிறைவேறாது; இயக்குனர் கவுதமன் பேட்டி


தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்ற விஷாலின் கனவு நிறைவேறாது; இயக்குனர் கவுதமன் பேட்டி
x
தினத்தந்தி 4 Dec 2017 3:30 AM IST (Updated: 4 Dec 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்ற விஷாலின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று திரைப்பட இயக்குனர் கவுதமன் கூறினார்.

நெல்லை,

ஒகி புயலால் கன்னியாகுமரியில் அதிக பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். சென்னை வானிலை மையம் தகவல் தெரிவிப்பதில் படுதோல்வி அடைந்து உள்ளது.

ஒரு புயல் உருவாகி சேதத்தை எங்கெல்லாம் உருவாக்கும் என்பதை அறிவிப்பதற்கு தான் வானிலை ஆய்வு மையம் உள்ளது. ஆனால் இவர்கள் புயல் உருவான பிறகு தான் தகவல்களை தெரிவிக்கிறார்கள். இந்த வானிலை மையம் எதற்கு? கடலில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் என்ன ஆனார்கள்? என்பது தெரியவில்லை. மாயமான மீனவர்களை மீட்பதில் கேரள அரசுக்கு இருக்கின்ற அக்கறை தமிழக அரசுக்கு இல்லை.

மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு உள்ளது. தமிழக அரசால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அந்த அளவிற்கு தமிழக அரசின் ‘ரிமோட் கண்ட்ரோல்‘ மத்திய அரசின் கையில் உள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் திட்டத்தைத்தான் கொண்டு வருகிறது.

கூடங்குளம் அணுமின்நிலையம் தொடங்கிய பிறகு 40–க்கும் அதிகமான முறை மின் உற்பத்தியை நிறுத்தி உள்ளார்கள். அதில் பழுது ஏற்பட்டு உள்ளதால் தான் இப்படி நிறுத்துகிறார்கள். இதனால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த திட்டத்தில் உள்ள பிரச்சினையை மக்களிடம் எடுத்து கூறவேண்டும். தமிழக மக்களின் நலனுக்காக பேராடுகிறவர்களை தமிழ் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

ஆர்.கே. நகர் இடைதேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் முறைகேடுகள் நடந்தால் தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தலை ரத்து செய்ய வேண்டும். பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகள், தவறுகள் நடந்தால் அதை இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து தடுத்து நிறுத்துவோம். மக்களிடம் இது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்துவோம்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தற்கொலை செய்தார்கள். இதில் இருந்தாவது தமிழக அரசு பாடம் கற்றுக்கொண்டு விழிப்புடன் செயல்பட்டு கந்துவட்டிக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருந்தால் திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலையை தடுத்து இருக்கலாம். கந்துவட்டிக்கு கொடுக்கப்படுகிற பணம் அரசியல் வாதிகளின் பணம். இதனால்தான் கந்துவட்டி கொடுப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பது கிடையாது.

நடிகர் சங்க பொதுச்செயலாளராக உள்ள நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைதேர்தலில் போட்டியிடப்போவதாக செய்திகள் வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரைக்கூட தமிழர்கள் நடிகர் சங்கம் என்று இவரால் மாற்ற முடியவில்லை. ஆனால் அவர், தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்ற கனவில் உள்ளார். அந்த கனவு ஒருபோதும் நிறைவேறாது. தமிழ்நாட்டை ஆள தமிழுக்காக உழைக்கின்ற, தியாகம் செய்த ஒருவர் வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story