வாழப்பாடியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
வாழப்பாடியில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.
வாழப்பாடி,
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் 50–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று பொதுமக்கள் குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்துகிறார்கள். இதுதவிர ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று மாலை 4 மணியளவில் காலிக்குடங்கள் மற்றும் துவைக்காத துணிகளுடன் வாழப்பாடி – தம்மம்பட்டி ரோட்டில் திரண்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வாழப்பாடி பேரூராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். வாழப்பாடி போலீசாரும் அங்கு விரைந்தனர். சாலைமறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது 2 நாட்களில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.