மாற்றுத்திறனாளிகள் குறைகளை சரி செய்ய நடவடிக்கை முதல்–அமைச்சர் நாராயணசாமி உறுதி


மாற்றுத்திறனாளிகள் குறைகளை சரி செய்ய நடவடிக்கை முதல்–அமைச்சர் நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 4 Dec 2017 5:00 AM IST (Updated: 4 Dec 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகள் குறைகளை கேட்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அரசு சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா நேற்று காலை ஜெயராம் திருமண நிலையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு கருவிகளையும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

விழாவில் துறையின் செயலர் மிகிர்வர்தன் வரவேற்றுப் பேசினார். இயக்குனர் சாரங்கபாணி ஆண்டறிக்கை வாசித்தார். மாநில விருதுக்கு தேர்வு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி விருதுகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரியில் அரசுத் துறைகளில் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு தர சட்டம் நிறைவேற்றியுள்ளோம். அதன்படி புதுச்சேரியில் 259 பேருக்கு அரசுத் துறைகளில் வேலை தந்துள்ளோம்.

மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க வாங்கியுள்ள கடன் ரூ.8 கோடியை தள்ளுபடி செய்ய மத்திய அரசை அணுகுவோம். 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றித்திறனாளிகள் குறைகளை கேட்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:–

மத்திய அரசு பண மதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி, தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகள் அகற்றம், பத்திரப்பதிவுக்கு தடை ஆகியவற்றை கொண்டு வந்ததால் புதுவையின் வருவாய் குறைந்துள்ளது. மத்திய அரசும் நிதி தரவில்லை. இதனால் கடந்த ஓராண்டுகளாக பல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. மாற்றுத்திறனாளி என போலியான சான்றிதழ்களை கொடுத்து அரசு சலுகைகளை பெற்று வருவதாக கூறப்படும் புகார்கள் குறித்து அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும். போலியான சான்றிதழ் கொடுத்தவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்படும். 3 சக்கர வண்டி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். இந்த அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிளையும் செய்வதற்கு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாநில விருது பெற்ற 23 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் திருமண உதவித்தொகையாக 8 தம்பதிகளுக்கு ரூ.2லட்சத்து 50 ஆயிரமும், 69 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய மூன்று சக்கர மிதிவண்டி, காது கேட்கும் கருவி போன்ற முடநீக்கு உபகரணங்களும் வழங்கப்பட்டன. எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த பார்வை திறன் குறைந்த மாணவர்களுக்கு ரூ.45 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழாவில் உதவி இயக்குனர் ரத்னா, கண்காணிப்பாளர் அல்லிமுத்து மற்றும் துறை அலுவலர்கள், 1500–க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். முடிவில் துணை இயக்குனர் சரோஜினி நன்றி கூறினார்.


Next Story