செலவுக்கு பணம் தராததால் அண்ணியை அடித்துக்கொன்ற வாலிபர்
செலவுக்கு பணம் தராததால் அண்ணியை அடித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,
திருவேற்காடு கோலடி, அன்பு நகர், 4–வது தெருவைச் சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 40). இவர், பூ வியாபாரம் மற்றும் வீட்டு வேலைகள் செய்து வந்தார். இவருக்கு தீபா (20) என்ற மகள் உள்ளார். இவர் அய்யப்பன்தாங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு தீபா வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் முனியம்மாள், அவருடைய தாயார் பாக்கியம்மாள் (80) மட்டும் இருந்தனர். வேலை முடிந்து நேற்று மதியம் தீபா வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்தது.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தாய் முனியம்மாள் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பாட்டி பாக்கியம்மாள் தலையில் காயத்துடன் மயங்கி கிடப்பதை கண்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர், பாக்கியம்மாளை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் ஆல்பிரட் வில்சன், திருவேற்காடு இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
பின்னர் கொலையான முனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்தனர்.
ஆட்ர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். கணவரின் தம்பியான பூபாலன் (30), அடிக்கடி முனியம்மாள் வீட்டுக்கு வந்து செல்வார். ஆட்டோ ஓட்டி வரும் பூபாலன், தனது அண்ணியிடம் அடிக்கடி செலவுக்கு பணம், நகை கேட்டு தொந்தரவு செய்து வந்து உள்ளார். மேலும் அவர் யாரிடம் பேசினாலும் சந்தேகப்பட்டு அவருடன் தகராறு செய்தும் வந்தார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டுக்கு வந்த பூபாலன், தனது அண்ணியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது அண்ணி முனியம்மாளை கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்து உள்ளார்.
இதை போலீசில் சொல்லி விடக்கூடாது என்பதால் மூதாட்டி பாக்கியம்மாளையும் கொலை செய்யும் நோக்கில் கட்டையால் தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக பாக்கியம்மாள் உயிர் தப்பி விட்டார் என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆட்டோ டிரைவர் பூபாலனை வலைவீசி தேடி வருகின்றனர்.