திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்


திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்
x
தினத்தந்தி 4 Dec 2017 5:14 AM IST (Updated: 4 Dec 2017 5:14 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் நேற்று கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் நேற்று கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் அய்யங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 23–ந் தேதி கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகா தீபம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கார்த்திகைதீப திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

மகாதீபத்தை காணவும், கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.

நேற்று முன்தினம் மாலையில் மகாதீபம் நிகழ்ச்சி முடிந்த பிறகு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து இரவு 12 மணியளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர் மர மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் முருகன் மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தங்க ரி‌ஷப வாகனத்திலும், பராசக்தி அம்மன் மர ரி‌ஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் மர நந்தி வாகனத்திலும் வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பவுர்ணமியை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பகலில் கிரிவலம் சென்ற பக்தர்களின் கூட்டம் மதியத்திற்கு மேல் கூட்டம் அதிகரித்தது. நேற்று கோவிலை சுற்றி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அய்யங்குளத்தில் 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடக்கிறது. முதல் உற்சவமான சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நேற்று இரவு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சந்திரசேகரரை வைத்து 3 முறை வலம் வந்தனர். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story