பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
திருப்பத்தூரில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் நகராட்சியில் ரூ.125 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு 25–வது வார்டு பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் 3 இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது மேட்டூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து, 7 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றது.
மேலும் பக்கத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் நீரும், அந்த குடிநீரில் கலந்து தேங்கியது. 2 நாட்களுக்கு முன்பு அந்த வழியாக சென்ற சிறுவன் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்து விட்டான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த சிறுவனை மீட்டனர். நேற்று மாடு ஒன்று அந்த பள்ளத்தில் விழுந்து விட்டது. அதையும் அப்பகுதி மக்கள் காப்பாற்றினர்.
இதனால் பெரிய விபரீதம் ஏற்படுவதற்குள் பள்ளத்தை மூடும்படி அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பல முறை கோரிக்கை விடுத்தும் பள்ளம் மூடப்படவில்லை. ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் திருப்பத்தூர் சின்னக்கடை தெரு சந்திப்பு திருப்பத்தூர் – திருவண்ணாமலை மெயின் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து சாலைமறியலை அவர்கள் கைவிட்டனர்.
அதனை தொடர்ந்து பள்ளங்கள் மூடப்படாத இடங்களுக்கு நகராட்சி ஆணையாளரை அழைத்துச்சென்று காண்பித்தனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும் என அதிகாரிகளை முற்றுகையிட்டனர். கடந்த 15 நாட்களாக கழிவுநீர் கலந்து வருகிறது, இதனால் நோய் பரவுகிறது, 3 இடங்களில் சுமார் 7 அடி ஆழத்திற்கு பள்ளம் இருக்கிறது, அதனை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தினர்.
அதைத்தொடர்ந்து உடைந்த குழாய்களை சரி செய்ய பாதாள சாக்கடை திட்ட மேலாளருக்கு ஆணையாளர் அசோக்குமார் உத்தரவிட்டார். அப்போது ஆணையாளருக்கும், பாதாள சாக்கடை திட்டப்பணி மேலாளருக்கும் இடையே அங்கேயே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, உடைந்த குடிநீர் குழாய்கள் சரிசெய்யப்பட்டன. இந்த சாலைமறியல் போராடத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.