வேகமாக நிரம்பி வரும் நிலையில் வெலிங்டன் ஏரிக்கரையில் விரிசல், 20 கிராம மக்கள் அச்சம்


வேகமாக நிரம்பி வரும் நிலையில் வெலிங்டன் ஏரிக்கரையில் விரிசல், 20 கிராம மக்கள் அச்சம்
x
தினத்தந்தி 5 Dec 2017 3:45 AM IST (Updated: 5 Dec 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில் ஏரிக்கரையில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளதால் கரையோரம் உள்ள 20 கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்செருவாயில் வெலிங்டன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி 1918-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இதன் மொத்த கொள்ளளவு 29.72 அடியாகும். 16.6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 2,580 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

ஏரிக்கு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொழுதூரில் உள்ள அணைக்கட்டில் இருந்து தனி வாய்க்கால் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த வாய்க்கால் மூலம் அரங்கூர், வாகையூர், ஆக்கனூர், பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள சிறிய ஏரிகளுக்கும் தண்ணீர் கிடைக்கும்.

இதுதவிர, அதர்நத்தம், வெங்கனூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் ஓடைகள் மூலம் மழைக்காலங்களில் வெலிங்டன் ஏரிக்கு தண்ணீர் வரும். ஏரி அதன் முழுகொள்ளளவை எட்டிய பின்னர், உபரி நீரை வெள்ளாற்றில் திறந்து விடுவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது பெய்த தொடர் மழை காரணமாக, தொழுதூர் அணைக்கட்டில் இருந்து ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 16.5 அடியை எட்டி உள்ளது. தற்போது ஏரிக்கு வினாடிக்கு ஆயிரத்து 100 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

ஏரி நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஏரியில் தற்போது புதிதாக போடப்பட்ட கரையும், பழைய கரையும் இணையும் இடத்தில் சுமார் ஒரு மீட்டர் ஆழத்திற்கு 3 முதல் 4 மீட்டர் நீளம் வரைக்கும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது.

ஏரிக்கரையில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் பற்றிய தகவல், அப்பகுதி மக்களிடையே வேகமாக பரவியதால், கரையோரம் உள்ள 20 கிராம மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். மேலும் பாசன விவசாயிகள் ஏரிக்கு நேரில் சென்றும் பார்த்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கடந்த 2010-ம் ஆண்டு ஏரியின் ஒருபகுதி கரை முழுமையாக சேதமடைந்தது. அப்போது பொதுப்பணித்துறையினர் ரூ.8 கோடி செலவில் கரையை சீரமைத்தனர். இதை தொடர்ந்து 2016-17-ம் ஆண்டில் கரையை பலப்படுத்துவதற்காக சுமார் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் புதிதாக போடப்பட்ட கரை பகுதியும், ஏற்கனவே உள்ள கரைபகுதியும் இணையும் இடத்தில் தான் இந்த விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. சுமார் 4 மீட்டர் நீளம் வரைக்கும் இந்த விரிசல் காணப்படுகிறது.

வறண்டு கிடந்த ஏரி, தற்போது பெய்த மழையில் தான் நிரம்பி வருகிறது. மேலும் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருப்பதால், எப்படியும் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டும் என்கிற நம்பிக்கை விவசாயிகளாகிய எங்களிடம் இருக்கிறது. இதுபோன்ற நிலையில், ஏரியின் கரையில் ஏற்பட்டுள்ள விரிசல் எங்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. ஏதேனும் விபரீதங்கள் நேர்ந்தால் சுற்றிலும் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கவலையுடன் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இது பற்றி அறிந்த பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் ராமகிருஷ்ணன், நிர்வாக பொறியாளர் கண்ணன், உதவி நிர்வாக பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று, விரிசல் ஏற்பட்ட கரை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சேதமடைந்த பகுதி பொக்லைன் எந்திரம் மூலம் சரிசெய்யப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story