6 மாதங்களில் மணல் குவாரிகளை மூட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் அரசு மேல்முறையீடு


6 மாதங்களில் மணல் குவாரிகளை மூட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் அரசு மேல்முறையீடு
x
தினத்தந்தி 5 Dec 2017 3:30 AM IST (Updated: 5 Dec 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களில் மூட வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, அரசு சார்பில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கலெக்டர்கள் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை,

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை மணலை, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க அனுமதி அளிக்க வேண்டும் என ராமையா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் தமிழகத்தில் சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கும் பொருட்டு ஜல்லியை தவிர மணல் குவாரி உள்ளிட்ட பிற கனிம குவாரிகளை படிப்படியாக 6 மாதங்களுக்குள் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் இருந்து இயற்கை மணலை இறக்குமதி செய்ய ஏதுவாக தமிழக அரசு தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்துசெய்யக்கோரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கலெக்டர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story