இலவச வீட்டுமனைப்பட்டா– அடையாள அட்டை வழங்க வேண்டும் கலெக்டரிடம், திருநங்கைகள் வலியுறுத்தல்


இலவச வீட்டுமனைப்பட்டா– அடையாள அட்டை வழங்க வேண்டும் கலெக்டரிடம், திருநங்கைகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Dec 2017 3:00 AM IST (Updated: 5 Dec 2017 1:32 AM IST)
t-max-icont-min-icon

இலவச வீட்டுமனைப்பட்டா, அடையாள அட்டை வழங்கக்கோரி தஞ்சை கலெக்டரிடம் திருநங்கைகள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரையிடம், திருநங்கைகள் கோரிக்கை மனு அளித்தனர். தஞ்சை மாவட்ட திருநங்கைகள் நல சங்க தலைவர் நளினி, சரண்யா, அன்புக்கரங்கள் சமூக நல சங்க செயலாளர் ராகிணி ஆகியோர் தலைமையில் திருநங்கைகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

3–ம் பாலினமான திருநங்கைகள் சமூகத்தை சேர்ந்த எங்களுக்கு சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பெற கடந்த 1 ஆண்டாக சமூக நலத்துறை அலுவலர்களை அணுகி வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. இதனால் அரசின் எந்த ஒரு நலத்திட்டத்தையும் எங்களால் பெற முடியவில்லை. நாங்கள் திருநங்கைகள் என்பதற்கான சான்றே இந்த அடையாள அட்டை தான் என்பதால் ஆதார்கார்டு, குடும்ப அட்டை, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, காப்பீடு திட்டம் போன்றவை பெறுவதில் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே எங்களுக்கு அடையாள அட்டை வழங்க வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் நாங்கள் இருக்க இடம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் எங்களுக்கு வாடகைக்கு கூட வீடுதர யாரும் முன்வருவது இல்லை. எனவே அரசு வழங்கும் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு தொடர்ந்து கலெக்டரிடமும் மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த ஒரு இடமும் ஒதுக்கித்தரவில்லை. பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வரும் எங்களுக்கு தயவு செய்து அரசு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.


Next Story