ஆர்.கே. நகரில் விஷாலுக்கு ஓட்டு போட வாக்காளர் ஏமாளிகள் அல்ல, காதர் முகைதீன் பேட்டி


ஆர்.கே. நகரில் விஷாலுக்கு ஓட்டு போட வாக்காளர் ஏமாளிகள் அல்ல, காதர் முகைதீன் பேட்டி
x
தினத்தந்தி 5 Dec 2017 3:15 AM IST (Updated: 5 Dec 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே. நகரில் நடிகர் விஷாலுக்கு ஓட்டு போடுவதற்கு வாக்காளர்கள் ஏமாளிகள் அல்ல என்று குற்றாலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன் கூறினார்.

தென்காசி,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் நெல்லை மாவட்டம் குற்றாலம் சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;–

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அரசு மக்களுக்கு தேவையான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் மெத்தனப்போக்கு பொதுமக்களை பாதித்துள்ளது. இந்த அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு விரைவில் தி.மு.க. தலைமையிலான ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் ஆவலாக உள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மருது கணேசுக்கு எதிர்கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளித்து வருகிறது. எனவே மருது கணேசின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் தான் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள் திடீர் திடீரென அரசியல் தலைவர்களாக வருகிறார்கள். அரசியலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வித்தியாசமானவர்கள். அவர்கள் அரசியலில் முன் அனுபவம் பெற்று அரசியல் என்றால் என்ன? என்பதை தெரிந்து அதன் பின் விளைவுகளை புரிந்து கட்சியை நடத்தி பதவிகளை வகித்துள்ளார்கள்.

ஆனால் இப்போது நடிகர்களாக உள்ளவர்கள், அரசியல் பற்றி பேசக்கூடியவர்கள், அரசியல் கட்சி தொடங்கப்போகிறோம் என்பவர்கள், அரசியல் பின்னணியே இல்லாதவர்கள், அனுபவம் இல்லாதவர்கள் புதிது, புதிதாக வருபவர்களை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் ஏமாற போவதில்லை. நடிகர் விஷால் ஒரு குடிமகன் என்ற முறையில் போட்டி போடுவது தவறில்லை. நான் எம்.எல்.ஏ. ஆக வேண்டும். என்னை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று கூறினால் தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல. நடிகர்களுக்கு அரசியல் பின்னணி எதுவுமே இல்லாத அவர்களுக்கு வாக்களிக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை. அதுவும் ஆர்.கே. நகர் தொகுதியில் அறவே இல்லை என்று கூறுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்பது மோடியின் பேச்சில் தெரிகிறது. அவரது பேச்சு வழக்கமாக பொதுமக்களை கவர்ந்து இழுக்கும். ஆனால் இப்போது பேசும் பேச்சில் தடுமாற்றம் உள்ளது. தோல்வி பயம் உள்ளது. எனவே காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு காதர் முகைதீன் கூறினார்.


Next Story