மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தென்மலை பெரியகுளம் பகுதியில் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
சிவகிரி அருகே உள்ள தென்மலை பெரியகுளம் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் விவசாய சங்க பிரதிநிதிகள் கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “சிவகிரி பகுதியில் உள்ளாறு முறியபஞ்சான் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். இதன் மூலம் 13 குளங்கள் பாசன வசதி பெறும். குறிப்பாக தென்மலை பெரியகுளம் பகுதியில் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு தலைமையில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே ஆவாரந்தலை பகுதியில் நம்பியாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு உள்ளது. அந்த பாலம் சமீபத்தில் பெய்த மழையால் இடிந்துள்ளது. பாலம் கட்டி 15 மாதங்களுக்குள் இடிந்து விழுந்ததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடைந்த பாலத்தை விரைந்து கட்டித் தர வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.
சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் தனது மனைவி குருவம்மாள், மகள் ராஜலட்சுமி ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். நுழைவு வாயில் போலீசார் அவர்கள் வைத்து இருந்த பையை சோதனை செய்தனர். அதில் மண்எண்ணெய் கேன் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அப்போது கிருஷ்ணன் கூறும் போது, “கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததால் தனது குடும்பத்துடன் தீக்குளிக்க வந்தேன்“ என்றார். அவர் கொண்டு வந்த மண்எண்ணெய் கேனை போலீசார் பறிமுதல் செய்து எச்சரித்து அனுப்பினர்.
பின்னர் கிருஷ்ணன், கலெக்டரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், கடந்த 2010–ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.80 ஆயிரம் வட்டிக்கு வாங்கினேன். இதுவரை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கட்டி விட்டேன். ஆனால் அவர் இன்னும் ரூ.80 ஆயிரம் கேட்டு மிரட்டுகிறார். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
நெல்லை டவுன் ஜெயப்பிரகாஷ் தெருவை சேர்ந்த சேது மனைவி தெய்வசுந்தரி. இவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினேன். தற்போது அவர் எனது வீட்டை அவரது பெயருக்கு எழுதி கொடுக்க சொல்கிறார். என்னிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
அம்பை அருகே உள்ள மன்னார்கோவில் பகுதியை சேர்ந்த சிலர், கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “எங்கள் பகுதியில் ஆடுகள் அடிக்கடி திருடப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. திருடப்பட்ட ஆடுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.