உகுசே கிராமத்தில், கண்காணிப்பு கேமராவில் பதிவான புலி உலா வந்த காட்சிகளை பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சி


உகுசே கிராமத்தில், கண்காணிப்பு கேமராவில் பதிவான புலி உலா வந்த காட்சிகளை பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 6 Dec 2017 3:00 AM IST (Updated: 6 Dec 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

உகுசே கிராமத்தில், கண்காணிப்பு கேமராவில் பதிவான புலி உலா வந்த காட்சிகளைப் பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சிக்கமகளூரு,

உகுசே கிராமத்தில், கண்காணிப்பு கேமராவில் பதிவான புலி உலா வந்த காட்சிகளைப் பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கிராம மக்கள் பதற்றம்

சிக்கமகளூரு மாவட்டம் உகுசே கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, புலி, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புலி, இந்த கிராமத்திற்குள் புகுந்தது. பின்னர் அது நாகேஷ் என்பவருக்கு சொந்தமான காபித் தோட்டத்தில் புகுந்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 3 பசு மாடுகளை வேட்டையாடி கொன்றது. பின்னர் அது வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.

இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் பதற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறை உயர் அதிகாரி சந்திரய்யா மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது பசு மாடுகளை அடித்துக் கொன்றது புலிதான் என்று உறுதியானது.

கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை

இதையடுத்து புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க சம்பவம் நடந்த பகுதியில் 3 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வனத்துறை உயர் அதிகாரி சந்திரய்யா உத்தரவிட்டார். அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு புலி உலா வந்த காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தது. அதைப்பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இரும்பு கூண்டு அமைத்து அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் உகுசே கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.


Next Story