வாழை, மிளகாய் பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் கலெக்டர் தகவல்


வாழை, மிளகாய் பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Dec 2017 2:45 AM IST (Updated: 6 Dec 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் வாழை மற்றும் மிளகாய் பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக வாழை பயிர் 880 எக்டர் பரப்பளவிலும், மிளகாய் பயிர் 4 ஆயிரத்து 300 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சாகுபடி செய்யப்படும் மிளகாய் மற்றும் வாழை பயிர் வறட்சி, வெள்ளம், நோய் தாக்குதல் போன்றவைகளால் பாதிக்கப்பட்டு விளைச்சல் பாதிக்கப்படுகிறது. அப்போது ஏற்படும் இழப்பினை ஈடுகட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ராபி பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை மற்றும் மிளகாய் பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட உள்ளது. தற்போது வாழை பயிருக்கு சிவகங்கை, இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய வட்டாரங்களிலும், மிளகாய் பயிருக்கு இளையான்குடி, திருப்புவனம் ஆகிய வட்டாரங்களிலும் அறிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமங்கள் வாரியாக பயிர் காப்பீடு செய்யப்பட உள்ளது.

அதன்படி வாழை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்ச இழப்பீடாக ரூ.35 ஆயிரத்து 50 வழங்கப்படும். இதற்கு பிரிமியமாக மத்திய–மாநில அரசு மானியம் போக ரூ.1,752.50 செலுத்த வேண்டும். இதேபோல் மிளகாய் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.18 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும். இதற்கு மானியம் போக பிரிமியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.900 செலுத்த வேண்டும். வாழை மற்றும் மிளகாய் பயிர்கள் காப்பீடு செய்வதற்கு பிரிமிய தொகை செலுத்த வருகிற 28.2.2018 கடைசி நாளாகும்.

எனவே வாழை மற்றும் மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் தாங்கள் கணக்கு வைத்துள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் மூலமாக பிரிமிய தொகையை செலுத்தலாம். அவ்வாறு செலுத்தும்போது, பயிர் செய்துள்ளதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பான மேலும் விவரங்களை தங்கள் பகுதி வட்டார தோட்டக்கலை துறை அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story