பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளுக்கு போட்டியாக முதல்–மந்திரி சித்தராமையா ஒரு மாதம் சுற்றுப்பயணம்


பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளுக்கு போட்டியாக முதல்–மந்திரி சித்தராமையா ஒரு மாதம் சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 6 Dec 2017 2:45 AM IST (Updated: 6 Dec 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளுக்கு போட்டியாக முதல்–மந்திரி சித்தராமையா ஒரு மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளுக்கு போட்டியாக முதல்–மந்திரி சித்தராமையா ஒரு மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை...

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2018) ஏப்ரல்–மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மாற்றத்திற்கான பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி ‘குமாரபர்வ‘ என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளுக்கு போட்டியாக முதல்–மந்திரி சித்தராமையா சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். சாதனை விளக்க பொதுக்கூட்டம் என்ற பெயரில் அவர் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில் சித்தராமையாவின் சுற்றுப்பயணம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.

பீதரில் தொடங்குகிறார்

அதன்படி வருகிற 13–ந் தேதி சித்தராமையா இந்த சுற்றுப்பயணத்தை பீதரில் தொடங்குகிறார். அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டமாக அவர் சென்று அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறும் பணியை மேற்கொள்கிறார். சித்தராமையா ஒரு நாளைக்கு ஒரு மாவட்டத்தில் 3 சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்துகிறார். ஜனவரி 13–ந் தேதி இந்த பயணத்தை சித்தராமையா பெங்களூருவில் நிறைவு செய்கிறார். இந்த ஒரு மாத சுற்றுப்பயணத்தில் 31, ஜனவரி 1, 2–ந் தேதி ஆகிய 3 நாட்கள் மட்டுமே சித்தராமையா ஓய்வு எடுக்கிறார்.

தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பாக சித்தராமையா மாநிலம் முழுவதும் சுற்றி வருகிறார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக அதாவது மார்ச் மாதம் மக்களிடம் ஆசி கேட்டு பயணத்தை காங்கிரஸ் சார்பில் அவர் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதில் சித்தராமையாவுக்கும், பரமேஸ்வருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக கூறப்படுகிறது.

சித்தராமையா மட்டும்...

அதனால் அரசு சார்பில் நடைபெறும் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சித்தராமையா மட்டும் கலந்து கொள்கிறார். காங்கிரஸ் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் சித்தராமையா மற்றும் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வர் ஆகிய இருவரும் பங்கேற்பார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.


Next Story